Tuesday 30 October 2012

அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக் கதிர்கள்:

அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக் கதிர்கள்:

கண்டறிந்தவர்கள்: பிரெடெரிக் ஹெர்ஷல் மற்றும் ஜோஹன் ரிட்டர் Frederick Herschel (IR) and Johann Ritter (UV)



ஆண்டு: 1800 & 1801

கண்ணுக்குத் தெரியாத இவ்விரு கதிர்களைப் பற்றியும் அறிந்து கொண்டபின் கடந்த 200 ஆண்டுகளில் விஞ்ஞானம் பல விஷயங்களைச் சாதித்துள்ளது. இக்கதிர்களின் கண்டுபிடிப்பே பின்னாளில் வானொலிக் கதிர்கள், காமாக் கதிர்கள் போன்றவற்றைக் கண்டறிய அடித்தளமாக விளங்கியது எனலாம். அகச்சிவப்புக் கதிர்கள் தொலைக்காட்சிப் பெட்டி ரிமோட், திருட்டுக் கண்டுபிடிக்கும் கருவி என்று பல கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றது. புற ஊதாக் கதிர்களோ சூரியக் கதிர்கள் பற்றித் தெளிவான ஆராய்ச்சி நடத்த ஏதுவாக இருக்கின்றது. சில பறவைகளும் மிருகங்களும் அகச்சிவப்புக் கதிர்களை உணர்ந்து இருட்டிலும் எளிதாக நகர முடிவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகைய பெருமை மிக்க கண்டுபிடிப்பு எவ்வாறு நிகழ்த்தப்பட்டது?

பிரெடெரிக் ஜெர்மன் ஹானோவரில் 1738ம் ஆண்டில் பிறந்தார். இளம் வயதில் இயல்பாகவே இசை மற்றும் வானியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். இவரே 1781ல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உலகில் கண்டறியப்பட்ட கோளான யுரேனஸைக் கண்டறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது! 

1799 இறுதியில் சூரிய ஒளி பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார் பிரெடெரிக். அவர் பல வண்ண வடிகட்டிகள் மூலம் சூரிய ஒளி நிறமாலையைப் பிரித்து ஆராய்ச்சி செய்வதைத் தனது வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது சில வண்ண வடிகட்டிகளில் மட்டும் வெப்பநிலை அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தார். சூரிய ஒளியின் சில வண்ணங்கள் மட்டும் மற்ற வண்ணங்களை விட‌ அதிக வெப்பத்தைக் கொணர்வதாகச் சந்தேகித்தார். 

இந்தச் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக ஒரு பிரம்மாண்டமான ஒளிப்பிரிகையை உருவாக்கினார் பிரெடெரிக். ஒரு இருண்ட அறைக்குள் இந்த ஒளிப்பிரிகையின் மூலம் சூரிய ஒளியைப் பாய்ச்சினார். நிறப்பிரிகையின் மூலம் வரும் ஒவ்வொரு நிறத்தின் மீதும் வெப்பநிலைமானியை வைத்து வெப்பத்தை அளந்தார். பிரெடெரிக்கிற்கு ஆச்சரியம் தரும் விதமாக சூரிய ஒளி நிறமாலையின் ஊதா நிற‌ப் பகுதி மிகக் குறைந்த வெப்பத்தைக் கொண்டதாகவும், சிவப்பு நிறப் பகுதி மிக அதிக வெப்பத்தைக் கொண்டதாகவும் இருந்தது. 

பிரெடெரிக் திடீரென்று ஒரு எண்ண உந்துதலில், சிவப்பு நிறத்தையும் தாண்டி இருண்ட இடத்தில் வெப்பநிலைமானியை வைத்துப் பார்த்தார். எந்த ஒளியும் வராததால் வெப்பநிலைமானியில் வெப்பநிலை உயர்ந்திருக்கக் கூடாது. ஆனால், இருப்பதிலேயே அதிக வெப்பத்தைக் காட்டியதைக் கண்டதும் ஆச்சரியத்தின் உச்சத்தில் நின்றார்! 

சூரிய ஒளியில் ஒளியுடன் வெப்ப அலையும் கலந்து வருவதாகவும், ஒளிப்பிரிகையின் போது அதிக விலகலைக் கொண்டு சிவப்பு நிறத்தையும் தாண்டி வெப்ப அலை பரவுவதாகவும் முதலில் சந்தேகப்பட்டார். அடுத்த சில வாரங்களில் நிகழ்த்திய பல ஆராய்ச்சிகளின் மூலம் ஒளியைப் போலவே அந்த வெப்ப அலையும் விலகல், குறுகல், ஒடிதல் ஆகிய விளைவுகளைக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. 

இக்கதிர் சிவப்பையும் தாண்டி இருந்ததால் அதற்கு அகச் சிவப்புக் கதிர் என்று பெயரிட்டார் பிரெடெரிக்.

ஜோஹன் ரிட்டர் 1776ல் ஜெர்மனியில் பிறந்தார். அவர் இயற்கை அறிவியல் தத்துவ விஞ்ஞானியாகத் திகழ்ந்தார். உலகின் அனைத்து சக்திகளின் பிறப்பிடமும் உர்க்ராஃப்ட் (Urkraft) எனும் ஒரே சக்தியிலிருந்து பிறந்தது எனும் தத்துவ நம்பிக்கையைக் கொண்டிருந்தார். 

1801ல் பிரெடெரிக்கின் கண்டுபிடிப்பு குறித்த செய்தியைப் படித்து அறிந்து கொண்டார். ரிட்டரும் அதே சூரிய ஒளி பற்றிய ஆராய்ச்சியில் இருந்தவர் தான். அவர் சூரிய ஒளியால் ஏற்படும் வேதியியல் மாற்றங்களையும், அவ்வொளி நிகழ்த்தும் மின்வேதியியல் மாற்றங்களையும் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அவரது ஆராய்ச்சியில் சில்வர் குளோரைடு எனும் வேதிப்பொருளின் மீது ஒளி படும் போது அது நிறம் மாறி வெள்ளையிலிருந்து கருப்பாக மாறுவதைக் கண்டறிந்திருந்தார். அதுவே இன்று நாம் காணும் புகைப்படங்களின் முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது!

ரிட்டரும் பிரெடெரிக் போலவே ஆராய்ச்சியில் ஈடுபடத்துணிந்தார். அதாவது நிறங்களில் எந்த நிறம் சில்வர் குளோரைடை வேகமாகக் கருப்பாக்குகின்றது என்று கண்டறிய முயற்சித்தார். அதற்காக பிரெடெரிக் போலவே ஒரு பெரிய இருண்ட அறைக்குள் ஒளிப்பிரிகை மூலம் ஒளியைப் பிரித்துப் பரவச்செய்தார். இப்போது சில்வர் குளோரைடு பூசப்பட்ட பெரிய காகிதங்களின் மேல் அந்நிற அலைகளை விழச் செய்தார். ஆக, இங்கு வெப்பத்தை அளக்காமல், ஒளியின் வேதிநிலை மாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. ஒவ்வொரு நிறமும் சில்வர் குளோரைடைக் கருப்பாக்கும் நேர அளவு அளக்கப்பட்டது. 

சிவப்பு நிறம் சில்வர் குளோரைடைக் கருப்பாக்குவதற்கு மிக அதிக நேரம் எடுத்துக் கொண்டது! ஊதா நிறமோ நொடியில் சில்வர் குளோரைடைக் கருப்பாக மாற்றியது. ஏற்கனவே பிரெடெரிக் செய்தது போலவே ஊதா நிறத்தையும் தாண்டிய இருட்டில் சில்வர் குளோரைடைக் காட்டிய போது என்ன ஆச்சரியம்!? அப்போது தான் மிக வேகமாக சில்வர் குளோரைடு கருப்பு நிறத்தை அடைந்தது!

ஆக, கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் கூட, ஒளியில் சில்வர் குளோரைடைக் கருப்பாக்கும் வேதிநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் அலை ஒன்று இருக்கின்றது என்று நிரூபணம் ஆயிற்று. அக்கதிர் ஊதா நிறத்தையும் தாண்டி இருப்பதால் அதற்குப் புற ஊதாக்கதிர் என்று பெயர் சூட்டினார் ரிட்டர்.

இன்றளவும் அகச்சிவப்புக் கதிர்களும், புற ஊதாக்கதிர்களும் மனித குலத்துக்குப் பல சூட்சுமங்களைக் காட்டியிருக்கின்றது. அவ்விரண்டு கதிர்களையும் கண்டறிந்த விஞ்ஞானிகளான பிரெடெரிக்கும் ரிட்டரும் என்றென்றும் விஞ்ஞான உலகில் மறக்கவியலா மனிதர்களாகின்றனர்.

No comments:

Post a Comment