Thursday 20 September 2012

அறிவியல் அறிவோம்

அறிவியல் பாடம் என்றாலே பெரும்பாலும் எல்லோருக்குமே கொஞ்சம் கசப்புதான் (எனக்கு அப்படித்தான் இருந்தது). முக்கியமாக இந்த சூரிய மண்டலம் பற்றி படிக்கும் போது ‘பூமி முதலான கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன’ என்று ஆசிரியர் சொல்லும் போது தலையும் சேர்ந்து சுழலும். மொத்த பள்ளிக்கே ஒரே ஒரு பூமி உருண்டைதான். அதை வைத்துக் கொண்டு எதோ சொல்லிக் கொண்டிருப்பார். ‘பரிச்சை வரும்போது படிச்சிக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டு தலையை மட்டும் ஆட்டி வைப்பேன்.

அந்த பூமி உருண்டை ஒரு பக்கம் சாய்ந்திருக்கும். யாரோ கீழே போட்டு ஒரு பக்கம் நெளிஞ்சி போச்சுன்னு’ நினைத்ததுண்டு :)
“பூமி தன் அச்சிலிருந்து 23.5 டிகிரி சாய்ந்திருக்கிறது” என்று சொன்னது சத்தியமாக புரியவில்லை. ஜுரம் வந்தா டிகிரி வச்சி பார்ப்பார்கள் இது அந்த டிகிரியா? அப்படீன்னா இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்
அது என்ன பூமி உருண்டை மேல் குறுக்கும் நெடுக்குமாக கோடு கோடா? யார் கிறுக்கி வச்சது?
குறுக்காக வரையப்பட்டிருப்பவை அட்ச ரேகைகள் (latitudes) நெடுக்காக வரையப்பட்டிருப்பவை தீர்த்த ரேகைகள் (longitudes/meridians).
அட்ச ரேகைகளில் மூன்று கோடுகளுக்கு சிறப்பு பெயர்கள் உண்டு. நடு நாயகமாக இருப்பது பூமத்திய ரேகை. பூமத்திய ரேகைக்கு மேலே(வடக்கே) 23.5 டிகிரியில் இருப்பது கடக ரேகை, கீழே(தெற்கே) 23.5 டிகிரியில் இருப்பது மகர ரேகை. மறுபடியும் டிகிரியா?
தீர்த்த ரேகைகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்றதை அழித்து விட்டால் பூமி உருண்டை உரித்த ஆரஞ்சு பழம் போலத் தெரிகிறதே?
இருங்க ஒரு ஆரஞ்ச் ஜூஸ் அடிச்சிட்டு வரேன்
சரி, மொத்தம் எத்தனை அட்ச ரேகைகள், தீர்த்த ரேகைகள் உள்ளன?

அட்ச ரேகைகள் : 180

தீர்க்க ரேகைகள் : 24
இது என்ன கணக்கு?

பூமத்திய ரேகைக்கும் வடதுருவத்துக்கும் (North Pole) 90 டிகிரி, அதே மாதிரி பூமத்திய ரேகைக்கும் தென் துருவத்துக்கும் (South Pole) 90 டிகிரி. ஆக, பூமிப்பந்தில் குறுக்கல ஒரு டிகிரிக்கு ஒரு வட்டம் போட்டால் மொத்தம் 180 அட்ச ரேகைகள்.“
ஆரஞ்சு பழத்தை குறுக்காக சரிபாதியாக வெட்டு” என்று சொன்னால் ஆரஞ்சு பழத்தை பூமி உருண்டையாக நினைத்துக் கொண்டு பூமத்திய ரேகையில் கத்தியை வைத்து ஒரு ‘சதக்’, சரிபாதி ரெடி. அதையே நெடுக்காக வெட்டு என்றால்? எங்கு கத்தியை வைத்தாலும் சரி பாதியாகுமே? அப்படியானால் ‘மையம்’ என்று எதைக் கொள்வது? நான் வெட்டுற இடம் தான் மையம் என்று நீங்கள் சொல்லலாம், பூமியை ‘கற்பனையில்’ வெட்டும்போது அப்படி சொல்ல முடியாதே! எதாவது ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தால் குழப்பமிருக்காது. அப்படி தேர்ந்தெடுக்கப் பட்ட இடம்தான் இங்கிலாந்தின் லண்டன் அருகேயுள்ள கிரீன்விச் (Greenwich). இந்த இடத்தில் கத்தியை வைக்க எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள்
சரி, இன்னும் 24 தீர்க்க ரேகைகளுக்கு விளக்கம் சொல்லலையே? இருங்க, அதுக்குத்தான் வரேன். மணி சரியாக மதியம் 12 அடித்தால் போதும், வயிறு ‘பசி, பசி’ என்று குதிக்கும். சரின்னு ஓடிப்போய் உப்புச்சப்பில்லாத ஒரு சாண்ட்விச்சை சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் நடந்தால் தலைக்குமேல் சூரியன் உலாவரும். மறுநாளும் அதே இடத்தில்தான் இருக்கும். இன்னும் ஒரு மணி நேரம் கழித்து போய்ப் பார்த்தால் கொஞ்சம் மேற்கு பக்கம் போயிருக்கும். நண்பன் ஒருவனுக்கு போன் பண்னினால், வெய்யில் போட்டு கொளுத்துது என்பான்; அவன் தலைக்கு மேல் இப்போது சூரியன்! ‘ஆமா பொல்லாத கண்டுபிடிப்பு’ என்கிறீர்களா?
இப்படி ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் எதாவது ஒரு இடத்தில் நண்பகல் இருக்குமல்லவா? அதான் கணக்கு. ஆக 15 டிகிரி இடைவளியில் (360/24 = 15) ஒரு தீர்த்த ரேகை. கிரீன்விச்சில் மணி பகல் 12 என்றால்,  கிரீன்விச்சுக்கு மேற்கே உள்ள தீர்த்த ரேகையில் காலை 11 மணி; கிழக்கேயுள்ள தீர்த்த ரேகையில் மதியம் 1 மணி. இப்படித்தான் நேரத்தைப் பிரித்திருக்கிறார்கள்.
சரி, கிரீன்விச்சிலிருந்து பகல் 12 மணிக்கு, முருகன் மயிலில் ஏறி உலகத்தை சுற்றி வந்தமாதிரி பூமியை ஒரு சுற்றி மறுபடியும் கிரீன்விச்சுக்கே வந்தால், நேற்றைய நேரம் பகல் 12 மணிக்கு வந்து சேருவீர்களே? தலை சுத்துதா? ஒரு ஜிஞ்சர் சோடா குடிச்சிட்டு மேல படிங்க. கிரீன்விச்சுக்கு அப்பிடியே 180 டிகிரிக்கு அந்த பக்கம் ஒரு தீர்த்த ரேகை இருக்கு பாருங்க? அது அக்கடான்னு பசிபிக் சமுத்திரத்தின் நடுவில் இருக்கு. மேற்கிலிருந்து கிழக்கே போகும் போது அந்த கோட்டைத்தாண்டினால் ஒரு நாள் கழித்துக் கொள்ளவும். அப்படியே சடன் பிரேக் போட்டு திரும்பி அந்த கோட்டைக் கடந்தால் ஒரு நாள் கூட்டிக் கொள்ளவும்.
இந்த கோட்டுக்கு ஒரு பெயர் உண்டு. சர்வதேச தேதிக் கோடு (International Date Line).
‘சூரியன் உதிக்கும் நாடு ஜப்பான்’ என்று படித்திருக்கிறீர்களா? உலகின் கிழக்கு கடைசியில் இருக்கும் பெரிய நாடு. பூமி சூரியன் பக்கம் மூஞ்சை திருப்பும் போது முதலில் சூரியனைப் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான், அதனால்தான் அந்தப் பெயர்.
சரி மறுபடியும் தீர்த்த ரேகை மேட்டருக்கு வருவோம். ஒவ்வொரு 15 டிகிரிக்கும் இடையே ஒரு மணி நேரம் வித்தியாசம். சரி, ஒவ்வொரு தீர்த்த ரேகையை கடக்கும் போதும் கடிகாரத்தை மாற்றி வைத்துக் கொள்ள முடியுமா? நேரத்தை மாற்றுவதே ஒரு வேலையாகப் போய்விடுமே! முடிவு? ‘நேரப் பகுதிகள்’ (Time Zones). நீ இந்தியாவில் இருக்கிறாயா? கிரீன்விச் நேரத்திலிருந்து 5:30 மணி நேரம் முன்னால் இருக்கிறாய். நீ நியூ யார்க்கில் இருக்கிறாயா? கிரீன்விச் நேரத்திலிருந்து 5 மணி நேரம் பின் தங்கியுள்ளாய் என்று பிரித்துக் கொடுத்து விட்டார்கள்.
இதில் கூத்து என்னவென்றால் இந்தியாவுக்கும், பங்களாதேஷ்க்கும் இடையே அரை மணி நேர வித்தியாசம். கல்கத்தாவிலிருந்து கிழக்கேயுள்ள டாக்கா அரை மணி நேரம் முன்னாலிருக்கும். டாக்காவுக்கும் கிழக்கே இருக்கும் இம்பாலில் இந்திய நேரம்!
சரி, தீர்த்த ரேகை ஏதோ உபயோகமாய் இருக்கிற மாதிரி இருக்கு, இந்த அட்ச ரேகை என்ன பண்ணுது? பூமி உருண்டையை கொஞ்சம் உற்றுப் பார்த்தால் ஒரு வரைதாள் (graph paper) மாதிரி இருக்கும். பள்ளியில் எப்படி ‘x=5; y=-10 என்னும் புள்ளியை குறிக்க’ என்றால் x அச்சு, y அச்சு வரைந்து குறிப்பீர்களோ அதே மாதிரி, பூமியின் எந்த ஒரு இடத்தையும் புள்ளியால் (co-ordinate) குறிக்க முடியும்! அதற்காகத்தான் இது. அந்த காலத்தில் கப்பலில் செல்பவர்கள் காணாமல் போகாமல் இருக்க ஆரம்பிக்கப் பட்டது. பூஜ்யம் (zero degree) எது என்று  கேட்கிறீர்களா? கொஞ்சம் யோசனை பண்ணுங்களேன், உங்களுக்கே தெரியும்!

No comments:

Post a Comment