நமது தாய்வீடான பூமி தோன்றி சுமார் 454
கோடி ஆண்டுகள் ஆகின்றன என அறிவியல் கிட்டத்தட்ட துல்லியமாய் கண்டுபிடித்து
விட்டது. சந்திரனிலிருந்து எடுத்துவந்த கல்லிருந்தும், பூமியில் இருக்கும்
கற்களின் வயதை அறியும் கதிர்வீச்சு சோதனை (radiometric age dating of
meteorite material) மூலமும் இது அறியப்பட்டது. இதில் 1% மாறுபாடு
இருக்கலாம். அவ்வளவே..! மேற்கு ஆஸ்திரேலியாவின் ஜாக் மலையிலிருந்து கிடைத்த
சிர்கான் படிகங்கள்தான் (Zircon crystals) இதுவரை கிடைத்த படிகங்களிலேயே
வயதானது. அதன் வயதுகுறைந்த பட்சம் 404 கோடி ஆண்டுகள் இருக்கலாம். சூரியனின்
நிறை மற்றும் பிரகாசம் போன்றவற்றை மற்ற விண்மீன்களுடன் ஒப்பிடும்போது நமது
சூரியனுக்கும், சூரிய குடும்பத்திற்கும் சுமார் 456.7 கோடி ஆண்டுகள்
ஆகின்றன என்பது தெரிய வருகிறது. அதுமட்டுமல்ல இதன் மூலம் பூமியின் வயதும்
454 கோடி ஆண்டுகள் என்பதும், பூமி, சூரிய, சந்திரர்கள் சம வயதுக்காரர்கள்
என்றும் கூட தெரிய வருகிறது.
Thursday, 20 September 2012
சுருங்கி வரும் நிலா
நம் அண்டை உலகமான சந்திரன் நோக்கிய பயணச் சாதனைகள் தொடங்கி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தேறி வருகின்றன.
அப்போலோ பயண சாதனைகளுக்குப் பிறகு ஏறத்தாழ
20 ஆண்டுகள் கழித்து, 1992 டிசம்பர் 7 அன்று சந்திரனை உற்று நோக்கிய
கலிலியோ எனும் அமெரிக்க விண்கலம் சந்திர வட துருவம் அருகே நிலாப்
பள்ளங்களில் நிரந்தரப் பனிக்கட்டி படிந்திருப்பதனை அறிவித்தது.
அவ்வளவுதான்.
இது ஏற்கனவே அறிவித்ததை விட ஏறத் தாழ 20
மடங்கு அதாவது 600 கோடி டன்கள், ஏறத்தாழ 30 கோடி லாரிகள் தண்ணீர் என்றால்
சும்மாவா? இதையே வேறு விதமாகச் சொன் னால் சந்திர நிலத்தடி நீரின் அளவு
இந்துமாக் கடலின் தண்ணீர் அளவில் ஒரு கோடியில் ஒரு பங்கு விண்வெளி நாடுகள்
யாவுமே நிலாத் தண்ணீரைக் குறிவைக் கின்றன.
நிலாப் பயணங்கள் மேற் கொண்ட நாடுகளின்
வரிசையில் ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பிறகு இன்று ஐரோப்பாவும்,
ஜப்பானும், சீனாவும் சேர்ந்து கொண்டன. அதற்கு அடுத்த ஆறாம் இடம்
இந்தியாவிற்கே என்று சொல்லவேண்டியது இல்லை.
எப்படியோ, சந்திராயன் விண்கலம் நிலாவை 100 கிலோ மீட்டர் துருவப்பாதையில் சுற்றியது.
சந்திரனின் கனிம வளங்கள் பற்றி
ஆராய்ந்ததில் நம் நாட்டின் சந்திரயானில் இடம் பெற்ற அமெ ரிக்காவின்
‘எம்-3’ (Moon Mineralogy Mapper -MMM) என்று குறிப் பிடத் தக்கது. அமெ
ரிக்கா வின் ஜே.பி.எல். என்கிற‘ஜெட் புரொப்பல்ஷன்’ லேபோரட்டரி (தாரை
உந்தும ஆய்வுச்சாலை) ஆராய்ச்சிக் கூடமும், பிரௌன் பல்கலைக் கழகமும் இணைந்து
வடிவமைத்த கருவி. இது ஏறத்தாழ 95 விழுக்காடு நிலாவைத் தனக்குள் பொதிந்து
கொண்டது. சந்திரனில் செறிந்து உள்ள ஹைடிராக்சில் நீர்க்கூறு அம்சம் கண்டு
பிடிக்கப்பட்டு உள்ளது.
உலக வரலாற்றில் இது முற்றிலும் புதிய கண்டுபிடிப்பு என்பது இருக்கட்டும்.
2009 ஆகஸ்ட் அன்று வடதுருவப் பனி அளவை
ஆராய்வதற்கு சந்திரக் கண்காணிப்புச் சுற்றுகலம் (Lunar Reconnaissance
Orbiter) என்கிற விண்கலனை நிலவுக்கு அனுப்பிற்று. அதில் நாசாவின் சிறு
வானலை அதிர்வுஏற்பி (Miniature Radio Frequency) ஒன்று இடம் பெற்றது. அதன்
பிம்பங்கள் நிலாவை முப் பரிமாணத் தில் பதிவு செய்தது. அங்குத் துரு வப்
பகுதிக ளில் பனி உறைந்து இருந்ததைக் கண்டுபிடித்து அறிவித்து உள்ளது.
அமெரிக்காவின் நிலாக் கண்காணிப்புச்
சுற்று கலமும், சந்திரயானின் மினி சார் எனும் சிறிய செயற்கைத்துளை ரேடார்
(Mini-Synthetic Aperture Radar) கருவியும் சேர்ந்து ஒரே தருணத்தில்
நிலாவின் வட துருவத்தில் மேலாக நின்று ‘எர்லாங்கர்’ குழுவினைப் படம்
பிடித்தன. நான்கு நிமிடங்களாக இவை பதிவு செய்த தகவல்கள் பூமியில் ஜான்ஸ்
ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் பயன்பாட்டு இயற்பியல் ஆய்வுக்கூடத்தில்
பெறப்பட்டு ஆய்வுகள் நடந்தன.
அதே ஆண்டு செப்டம்பர் 7-8 ஆகிய நாள்களில்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், அமெரிக்காவின் நாசா மற்றும் ஐரோப்பிய
விண்வெளிக் கழக அறிவியறிஞர் கள் கூடி அலசி ஆராய்ந்தனர். அதன்படி
நிலாத்தண்ணீர் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அது குடிக்கிற மாதிரி திரவ நீர்
அல்ல. பனிக்கட்டிகளும் அல்ல. மண் படிகங்களிலும், மணலிலும் பிணைந்து உள்ள
நீர்க்கூறுகள் அவ்வளவே.
அது நம்மில் இருந்து மெல்ல மெல்ல விலகி
வருகிறதாம். 2004ஆம் ஆண்டு கிரிகொரி ஏ.கிராசின்ஸ்கி (Gregory A.Krasinsky)
மற்றும் விக்டர் ஏ.பரம்பர்க் (Victor A.Brumberg) ஆகியோர் ஆய்வுப்படி
புவிக்கும், சூரியனுக்கும் இடையிலான தூரம் கூட ஒவ்வோர் ஆண்டும் 15 செமீ
வீதம் அதிகரித்து வருகிறதாம்.
நிலாத் தண்ணீர் மனதுக்குக் குளிர்ச்சி.
விலகும் சந்திரன் சந்திரனுக்கே குளிர்ச்சி தரும். இந்த நிலையில் சந்திரன்
குறித்து இன்று புரியதோர் தகவல் கண்டு அறியப்பட்டு உள்ளது.
வேறு ஒன்றுமில்லை. சந்திரனின் பருவ
ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறதாம். நிலாக் கண்காணிப்புச் சுற்று கலன்
பார்வையில் நிலாவின் தரைப்பரப்பில் பல்வேறு ‘முண்டு விரிசல்கள் (Lobate
Scarps) பதிவாகி உள்ளன - நிலா முகத்தில் வயதான சுருக்க ரேகைகள் மாதிரி.
கடந்த 100 கோடி ஆண்டுகளுக்குள் 100
மீட்டர்கள் அளவு சுருங்கி விட்டது என்கிறார் அமெரிக்காவில் ஸ்மித்சோனியப்
பல்கலைக் கழகத்தின் ஆய்வுக் குழுத் தலைவர் தாமஸ் வாட்டர்ஸ். அதாவது ஒவ்வொரு
நூற்றாண்டும் நம் நிலா 10 மைக்ரோன் அளவு மெலிந்து வருகிறது. சராசரி
தலைமுடி அளவில் பத்தில் ஒரு பங்கு. இதற்குப் போய்ப் பயப்படுவானேன்
என்கிறீர்கள்?
ஆனாலும் நம் நிலா சும்மா அழகுப்
பதுமையாய்ச் சுற்றிவராமல் புவி வரலாற்றியல் அடிப்படையில் சதா
இயங்கிக்கொண்டு இருக்கிறது என்பதுதான் இன்றைய புதிய தகவல்.
(அறிவியல் ஒளி டிசம்பர் 2011 இதழில் வெளியானது)
வேறு கோள்களில் உங்களின் வயது?
நம் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி
நேரம்தான். ஆனால் நம் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் ஒவ்வொன்றின் ஒரு
நாள் நேரமும் வேறு வேறாக இருக்கிறது.
புதன் சூரியனுக்கு மிக அருகில்
இருக்கிறது. அதனால் அதன் மேல் சூரியனின் ஈர்ப்பு சக்தி அதிகம் தெரியும்.
புதன் கோள் ஒருமுறை தன்னைத்தானே சுற்றி முடிக்க நம்ம பூமி நேரப்படி 175.94
நாட்கள் 59 மணி நேரம் ஆகிறது. அதுதான் புதனின் ஒரு நாள் ஆகும். எந்தக்
கோளாக இருந்தாலும் சரி தன் அச்சில் ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள
எடுத்துக்கொள்ளும் நேரமே, அந்த கோளின் ஒரு நாள் எனப்படுகிறது.
சூரிய குடும்பத்தில், நம் பூமிக்கு முன்னாடி இருக்குற வெள்ளி கோளின் ஒரு நாள் என்பது நமக்கு 243 நாட்கள் ஆகும்.
அடுத்து நம் பூமியோட ஒரு நாள் என்பது
சரியா துல்லியமா 24 மணி நேரம் இல்லை. 23 மணி 56 நிமிடம் 4.1 நொடிகள்
தான். நம் பூமியின் துணைக்கோளான சந்திரனின் ஒரு நாள் என்பது நமக்கு 29.53
நாட்கள்.
செவ்வாயின் ஒரு நாள், 24 மணி 37
நிமிடம் 22.66 நொடிகள் தான். செவ்வாயோட சுற்று வேகமும், பூமியோட சுற்று
வேகமும் சராசரியா ஒண்ணுதான்.
வியாழன்தான் சூரியக் குடும்பத்திலே வெகு
வேகமா சுத்தற கோள். அதனுடைய ஒரு நாள் என்பது நமக்கு 9 மணி 55 நிமிடம் 33
நொடிகள். இந்த வியாழன் நம்ம பூமியைவிட 317 . 5 மடங்கு அதிக நிறை உள்ளது.
பூமியில் மட்டும்தான் எடை என்று குறிப்பிடுகிறோம். எடை என்பது ஈர்ப்பு
விசைக்குத் தகுந்தாற்போல மாறும். எனவேதான் பூமியைத்தவிர மற்ற கோள்,
சூரியனில் எல்லாம் நிறை என்றே சொல்லவேண்டும்.
சனிக்கோளின் ஒரு நாள் என்பது 10 மணி 32
நிமிடம் 36 நொடிகள். சனிக்கு அடுத்து இருக்குற யுரேனஸ் கோளின் ஒரு நாள்
என்பது 17 மணி 14 நிமிடம் 23 நொடிகள். நெப்டியூனின் ஒரு நாளுக்கும்
கிட்டத்தட்ட அதே நேரம்தான் 16 மணி 6.6 நிமிடம்.
வேறு கோள்களில் உங்களின் வயது?
அது இந்த கோள்களின் ஒரு நாள்
நேரத்துடனும், ஒரு வருஷ காலத்துடனும் சம்பந்தப்பட்டது. உங்களது மகனின்
பிறந்த நாள் 11 .02 .1990 என்று வைத்துக்கொள்வோம். பூமியில் தங்களது
பையனின் வயது 22 வயது என்றால், புதன் கோள்லே 91 .3 வருஷம் ஆகும். ஆனால்
அடுத்த பிறந்த நாள், திங்கள் கிழமை, செப்டம்பர் 9, 2012 தான் வரும். அதே
போல் வெள்ளியிலே, 35.7 வயசு, அடுத்த பிறந்த நாள் 2012 , ஏப்ரல் 5 ,
வியாழக்கிழமை வரும். ஆனால் பூமியிலே, அடுத்த பிறந்த நாள் 2013 , பிப்ரவரி
10, ஞாயிறு அன்னிக்கு வரும். இந்த ஆண்டு லீப் வருஷம்.
செவ்வாயில் வயது 11 .6. அடுத்த பிறந்த
நாள் தேதி வியாழன் செப்டம்பர், 6, 2012. ஆனால் வியாழனில் தங்களது மகன்
குழந்தைதான். வயது 1.85. அடுத்து வரும் பிறந்த தேதி சனிக்கிழமை, நவம்பர் 2,
2013 தான்.
சனிக் கோளில் ஒரு வயது கூட ஆகியிருக்காது.
நம் பூமியிலே பிறந்த பிள்ளைக்கு 22 வயது என்றால், அது சனிக்கோள்லே
பிறந்திருந்தால், அதற்கு 0.74 வருஷம் தான் ஆகி இருக்கும். அடுத்த , பிறந்த
நாள் ஞாயிறு, ஜுலை 28, 2019லே வரும்.
இன்னும் தொலைவிலே இருக்கிற யுரேனஸ் கோளில்
பூமியின் 22 வயது இளைஞருக்கு, வெறும் 0.26 வருடம்தான் ஆகும். அடுத்த
பிறந்த நாள், 2074 , பிப்ரவரி 15ல், வியாழன் அன்று நிகழும்.
ஒவ்வொரு கோளிலேயும் ஓர் ஆண்டு என்பது
அதனோட சுற்று வேகத்தையும், அது எத்தனை நாட்களில் சூரியனைச் சுற்றி வருகிறது
என்பதையும் பொறுத்தது. இதையெல்லாம் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைகோ
பிராகியும், அவரின் உதவியுடன் ஜொகான்னஸ் கெப்ளரும் (1571 -1630), கணித
சூத்திரங்கள் மூலம் சரியாகக் கண்டறிந்தனர்.
சூரியக் குடும்பம் – சில சுவையான தகவல்கள்
சூரியக் குடும்பம் எவ்வாறு தோன்றியது?
இதற்கு உறுதிப் பூர்வமான கொள்கையோ, பதிலோ இதுவரை கண்டறியப் படவில்லை.
சூரியக் குடும்பம் தோன்றியது குறித்து இதுவரை பல்வேறான கருத்துக்கள் கூறப்
பட்டு வந்துள்ளன. தொடக்கத் தில் 18-ஆம் நூற்றாண்டில் புகையுருக் கோட்பாடு
என்ற தத்துவம் ஒன்று கூறப்பட்டது. பல வாயுக்களால் அமைந்த பெரும் தொகுதி
ஒன்று, சுழற்சியினால் மெதுவாகக் குளிர்ந்து சுருங்கத் தொடங் கியது.
அச்சுருக்கத்தின் காரண மாக, அந்தத் தொகுதி முழுவ தும் ஈர்ப்பு-சக்தியின்
அணைப்பினால் சுழற்சி வேகம் மேலும் அதிகரித்தது; அதனால் அத்தொகுதியின்
வெளிப்பரப்பின் வேகம் மிகவும் அதிகமாக, ஈர்ப்பை மீறத் தொடங்கியது.
இதிலிருந்து சிறு சிறு துண்டுகள் விடுபட்டுக் கோள்கள் உருவாயின. நடுப்பகுதி
மட்டும் சூரியனாக ஒளியையும், வெப்பத்தையும் அளித்துக் கொண்டுள்ளது.
இவ்வாறு புகையுருக் கோட்பாடு, சூரியக் குடும்பத்தின் தோற்றம் பற்றிக்
கூறுகிறது.
பின்னாட்களில் ஏற்பட்ட அறிவியல்
வளர்ச்சியால் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ஈர்ப்பு விசையை
மீறி இடைப்பட்ட துண்டுகள் வெளியேற முடியாது என்று அறியப்பட்டது. இவற்றின்
காரணமாக இக்கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
18 ஆம் நூற்றாண்டில் சூரியக் குடும்பத்
தோற்றம் பற்றிய கொள்கை உருவானது. விண்வெளியில் திரியும் மற்றொரு விண்மீன்
சூரியனின் அருகே வர நேர்ந்தபோது, ஈர்ப்பின் காரணமாக, சூரியனது வாயுக்களை
விண்வெளியில் அது கவர்ந்து ஈர்த்தது; அவ்வாறு சூரியனிலிருந்து பிரிந்த
வாயுக்கள் குளிர்ந்து கோள்களாக உருவாயின என்று அக்கொள்கை விளக்கமளிக்கிறது.
இரு விண்மீன்களுக்கு இடையேயுள்ள தூரம் மிக அதிகமாகையால் சூரியனை நோக்கி
அதன் அருகே மற்றொரு விண்மீன் வந்திருக்கும் என்பது ஏற்புடையதாக இல்லை.
இறுதியாகத் தற்போது
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கொள்கை ஒன்று உள்ளது. அது பின்வருமாறு
விளக்கமளிக்கிறது. வெகுகாலத்திற்கு முன் ஒரு மிகப் பெரிய விண் முகில்
இருந்தது. அதன் ஒரு பகுதியில் நிறைச் செறிவு ஏற்பட்டது. இப்பகுதி ஏனைய
பகுதிகளை ஈர்க்க ஆரம்பித்தது. அதாவது நியூட்டனின் ஈர்ப்பு விதியின் படி,
இரு பகுதிகளான விண்முகிலில் நிறை ஈர்ப்புக் செறிவு மிகுந்த பகுதி,
மறுபகுதியை ஈர்க்க ஆரம்பித்தது. இதன் பின் சொந்த நிறை ஈர்ப்பினால் விண்
முகில் சுருங்கத் தொடங்கியது. இந்நிலையில் இது ஒரு வாயுப் பந்து போல்
சுருங்கச் சுருங்கச் சுழலும் வேகமும் அதிகரித்தது. காலப்போக்கில் இதன்
மையப் பகுதி குமிழ் போன்றும் சுற்றுப்பகுதி வட்டுப் போன்ற அமைப்பையும்
பெற்றது. .இதன் பின்னர் வெளிப்புற வட்டின் சுழற்சி வேகம் அதிகரித்ததால்
மையப் பகுதியில் உள்ள குமிழ் மேலும் சுருங்கியது. இதனால் மையத்தில் வெப்பம்
அதிகரித்து மையப்பகுதி ஒரு விண்மீனாக (சூரியன்) மாறியது. சுற்றியுள்ள
வட்டு உடைந்து சிறு பகுதிகளாகப் பிரிந்து வெவ்வேறு கோள் மீன்களாக மாறின.
சூரியனுக்கு அருகில் உள்ள கோள்களான புதன்,
வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகியன மிக அதிகமான வெப்ப நிலையிலிருந்து
குளிர்ந்து உருவானவை. இதனால் இவை திடக் கோளங்களாகக் காணப்படுகின்றன.
இவற்றில் சிலிக்கான், இரும்பு போன்ற தாதுக்கள் காணப்படுகின்றன. இத்திடக்
கோளங்களைச் சுற்றி மென்மையான வாயு மண்டலம் காணப்படுகின்றது. ஆனால்
சூரியனிலிருந்து தொலைவில் உள்ள கோள்கள் உயர்வெப்ப நிலையை அடையாது குளிர்ந்த
வாயு நிலையிலேயே சுழன்று வருகின்றன. இவை பெரும்பாலும் ஹீலியம், ஹைடிரஜன்
ஆகிய வாயுத் தனிமங்களைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன.
சூரியனுக்கு அருகிலிருந்து இருக்கும்
இடப்படி முறையே புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ்,
நெப்டியூன் என அமைந்துள்ளன. சூரியனுக்கும் புவிக்கும் இடையே அமைந்துள்ள
கோள்களான புதன், வெள்ளி ஆகிய இரண்டும் உட்கோள்கள் (Inner Planets) என்று
அழைக்கப்படுகின்றன. புவியைத் தாண்டிச் சுற்றி வரும் கோள்களான செவ்வாய்,
வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியன வெளிக்கோள்கள் என்று
அழைக்கப்படுகின்றன. சூரியனைச் சுற்றி வரும் இக் கோள்மீன் அனைத்தின்
பாதையும் நீள்வட்டமே. அதே வேளையில் இவை ஏறக்குறைய ஒரே தளத்தில்
அமைந்துள்ளன.
(நன்றி – மனோரமா இயர்புக்)
வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . !
வெள்ளி மறைப்பு என்றால் என்ன?
வானில் வளைய வரும் வான் பொருட்களான
சூரியன், சந்திரன், வெள்ளி மற்றும் புதன் போன்றவை ஒன்றை ஒன்று தொட்டு
விளையாடுகின்றன. அவற்றின் உருவம் பெரிதாக இருந்து, ஒன்றை ஒன்று முழுமையாக
மறைத்தால், அது கிரகணம். மறைக்க முயலும்/சூரிய பிம்பத்துக்குள் வரும்
பொருள் சிறிதாக இருந்தால், அதனை மறைப்பு என்கிறோம். வெள்ளி மறைப்பு என்பது
கிட்டத்தட்ட சூரிய கிரகண்ம் போலத்தான். எப்படி சூரிய கிரகணத்தில்
பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவு வருகிறதோ, அது போலவே, வெள்ளி
மறைப்பில், பூமி, சூரியனுக்கு இடையில் வெள்ளியார் மிக மெதுவாக வலம்
வருவார். முழு கிரகணத்தில் சூரியன் நிலவின் உருவால் மறைக்கப்படும்; இதில்
வெள்ளி சின்ன கரும்புள்ளியாக சூரியனின் ஒரு ஓரத்தில் குறுக்கு மூலை
பாய்ந்து ஓடும். இதனை நாம் பார்க்க முடியும். மறைப்பு என்பது குறைந்தது 6
மணி நேரம் நடைபெறும். கடந்த 2004 ல் நிகழ்ந்த வெள்ளி மறைப்பு 6 மணி நேரம்
நிகழ்ந்தது.
வெள்ளியின் விட்டம் (12,092 km (only 650
km less than the Earth's) /0. 949 9 Earths) சந்திரனை (3476 km /(0. 273
Earths ) விட 4 மடங்கு அதிகம். ஆனால் வெள்ளி( from Earth: its closest,
Venus is 41840000 km), சந்திரனை (356400 km to 406700 km)விட மிகத்
தொலைவில் உள்ளதால், பார்வைக்குச் சிறியதாகத் தெரிகிறது. மேலும் இது மிக
மெதுவாகவே (224.7 Earth days) பயணிக்கும். இதன் ஒரு நாள் என்பது 244 பூமி
நாட்கள். ஆனால் சூரியனை 224.7 பூமி நாட்களில் சுற்றிவிடுகிறது. இது ஒரு
வருடம். என்ன தலையைச் சுற்றுகிறதா? இதுதான் வெள்ளியின் நிலை. எனவே வெள்ளி
மறைப்பு என்பது சிறிய கடுகு ஒரு பெரிய தட்டின் ஓரத்தில் மெதுவாக ஓடுவதைப்
போலிருக்கும். இந்த வெள்ளி மறைப்பை கவனித்ததின் மூலமாகத்தான், இடமாறு
தோற்றப்பிழை கருத்தின் அடிப்படையிலேயே விஞ்ஞானிகள், சூரியனுக்கும்,
பூமிக்கு இடையிலுள்ள தொலைவைக் கணித்தனர்.
எப்போது வெள்ளி மறைப்பு நிகழும்?
வெள்ளி மறைப்பு என்பது கணிக்கப்படும்
வானவியல் நிகழ்வுகளில் மிகவும் அரிதானதும், அற்புதமானதும் கூட. வெள்ளி
சூரியனை, 225 நாட்களுக்கு ஒரு முறை வலம் வருகிறது. 548 நாட்களுக்கு ஒரு
முறை, பூமிக்கு அண்மையில் வெள்ளி வந்தாலும் கூட, வெள்ளி கோள் மறைப்பு வெகு
அரிதானது. வெள்ளியின் பாதை, 3.4 டிகிரி சாய்வாக அமைந்துள்ளது. ஆயிரம்
ஆண்டுகளில் சராசரியாக 14-18 முறை வெள்ளி மறைப்பு நிகழும். ஆனால், புதன்
மறைப்பு என்பது 100 ஆண்டுகளில் 13-14 நிகழும்.
வெள்ளிக் கோள்/சூரிய கிரகணம் எப்போதிலிருந்து பார்க்கப்பட்டது?
குறிப்பிட்ட பழங்கால நாகரிகங்களில் இந்த
வெள்ளியின் மறைப்பு வந்துபோனது பற்றி எதுவும் குறிப்பிட்டதற்கான சான்றுகளே
இல்லை. ஆனால் ஆதிகால அமெரிக்க நாகரிகங்களில் குறிப்பாக மாயன்
நாகரிகத்திலும் வெள்ளியைப் பற்றி சிறப்பாக, பெரிய விண்மீன் மற்றும் வண்டு
விண்மீன்(Wasp Star) என்றும் குறிப்பிடுகின்றனர். வெள்ளியை அவர்கள்
குல்குல்கன் (Kukulkán) கடவுள் என்றும் அழைக்கின்றனர். மெக்சிகோவின் மற்ற
பகுதிகளில் வெள்ளியை குகுமாட்ஸ் (Gukumatz)& க்வெட்ஸால்கோயட்ல்
(Quetzalcoatl )என்றும் சொல்லப்படுகின்றது. டிரெஸ்டன் விதிகள் என்ற
மாயன்களின் புத்தகத்தில் (இது 11 ம் நூற்றாண்டைச் சேர்ந்தது, ஆனால்
அதற்கும் 4 நூற்றாண்டுகளுக்கு முன்பே இது எழுதப்பட்டதாம் ) மாயன்கள்
வெள்ளியின் முழு சுழற்சி(cycle of venus)பற்றியும் அட்டவணைப்படுத்தியும்
இருக்கின்றனர். வெள்ளியின் வரவுகளை மிகத் துல்லியமாகக் கூறியவர்கள், வெள்ளி
மறைப்பு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
அரிஸ்டாட்டில் என்ற தத்துவ மேதை (கி.மு.
384 -322) பகுதி சூரிய கிரகணத்தை மரத்தின் அடியில் அமர்ந்து கவனித்ததாகப்
பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அஸ்டெக் மற்றும் இன்கா நாகரிகங்களில் சூரியன்
மற்றும் சூரிய கிரகணம் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. வானவியல்
நிகழ்வுகளைக் கண்டறிந்தபோதுதான், கணிதம் மூலம் கோள்களின் சுற்றுப்பாதை
பற்றி விவரித்தனர். பின் கோள்கள் சூரிய விட்டம், வட்டத்தில் நுழைவதைப்
பற்றி ஆராய்ந்தனர். அவைகளில் சந்திர, சூரிய கிரகணங்கள், வெள்ளி மறைப்பு
மற்றும் புதன் மறைப்பு ஆகியவை முக்கியமானவை. முதல் சூரியப் புள்ளியை
தொலைநோக்கி கண்டுபிடிக்கு முன், இங்கிலாந்தில் வோர்ஷ்டர்ஷிரின் சகோதரர்,
பிரியர் பிரதர் ஜன என்பவர் 1128, டிசம்பர் 8ம் நாள் பார்த்தார்.
வெள்ளி மறைப்புக் காணுவதன் முக்கியத்துவம் என்ன?
வெள்ளி மறைப்பு என்பது ஓர் அரிதான
வானியல் நிகழ்வுதான் என்றாலும், விஞ்ஞானிகளின் ஆர்வம் என்பது, வெள்ளி
நகர்வினால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரத்தை இடமாறு
தோற்றப்பிழை மூலமும், கெப்ளரின் மூன்றாம் விதி மூலமும் அறிவது என்ற ஒரே
குறிக்கோளாகத்தான் இருந்தது. இதிலுள்ள யுக்தி என்னவென்றால், வெள்ளிக் கோள்
சூரிய பிம்பத்தில் நுழையத் துவங்கும் நேரத்தையும், அதிலிருந்து வெளியேறும்
நேரத்தையும் கணக்கிட்டு, அதிலுள்ள மிக மெலிதான நேர வேறுபாட்டைத் துல்லியமாக
அறிந்து, பூமியின் மேற்பரப்பிலிருந்து இவை எவ்வாறு பிரிந்துள்ளன என்பதை
அறிவதே. வடிவியல் மூலம் சாய்கோணம் அறிந்து அதன் வழியே நூலேணியில் ஏறுவது
போன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலுள்ள தூரத்தை துல்லியமாக
அளப்பதுதான்.
ஐரோப்பாவில் காணப்பட்ட வெள்ளி மறைப்பு நிகழ்வு. . !
வெள்ளி மறைப்பு/சூரியனின் பிம்பத்தில்
நகர்வு என்பது 16ம் நூற்றாண்டிலேயே ஐரோப்பாவில் காணப்பட்டிருக்கிறது. இதனை
நிகோலஸ் கோபர்நிகஸ் (Nicolus Copernicus , 1473 -1543) பார்த்திருக்கிறார்.
ஆனால் அதனை அவர் பதிவு செய்யவில்லை. பிறகு மற்றொரு வெள்ளி மறைப்பு நிகழ்வு
1526 ல் வந்திருக்கிறது. ஆனால் கோபர்நிகஸ் போலாந்து நாட்டின் வரைபட
வேலையைக் கவனித்ததால், வெள்ளி மறைப்பை கவனிக்கவில்லை. பிறகு, ஜெர்மானிய
வானவியலாளர் ஜோஹான்னஸ் கெப்ளர், 1631, நவம்பர் 7 ம் நாள் புதன் மறைப்பு
சூரியனில் நிகழும் என்று சொன்னார். அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் வெள்ளி
மறைப்பு வரும் என்றார். ஆனால் 1631 ஏற்பட்ட வெள்ளி மறைப்பினை யாரும்
பார்த்ததாக பதிவு செய்யப்படவில்லை. காரணம் என்னவெனில், அன்று ஐரோப்பா
முழுமைக்கும் பெரிய சூறாவளி வீசி, சூரியனைக் காணமுடியாமல் மறைத்துவிட்டது.
ஆனால் அடுத்த வெள்ளி மறைப்பு 1756ல் வரும் எனத் தவறாகக் கணித்தார் கெப்ளர்.
ஜொகான்னஸ் கெப்ளரும், வெள்ளி மறைப்பும். . !
17ம் நூற்றாண்டு வானவியலாளர்கள்,
சூரியனிலிருந்து ஒவ்வொரு கோளும் எத்தனை தொலைவில் உள்ளது என்றும்
கணக்கிட்டனர். பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலுள்ள தூரம் ஒரு வானவியல்
அலகு (an astronomical unit) என்றும் அறியப்பட்டு, கணக்கிடப்பட்டது.
இருப்பினும், துல்லியமான அலகு இன்னும் அறியப்படவில்லை. வெள்ளி மறைப்பு
நிகழ்வு வரப்போவது பற்றி முதன் முதல் கணித்துச் சொன்ன பெருமையும் புகழும்
ஜோஹான்னஸ் கெப்ளரையே(Johannes Kepler) சேரும். வெள்ளி மறைப்பு என்ற அரிய
வானவியல் நிகழ்வு 1631ல் வரப்போகிறது என்று உலக மக்களுக்கு அறிவித்தார்
கெப்ளர். ஆனாலும் கூட, அவரது கணிப்பு முறை என்பது அவ்வளவு துல்லியமாக
இல்லை. மேலும் அப்போது நிகழ்ந்த வெள்ளி மறைப்பை ஐரோப்பாவின்
பெரும்பான்மையான இடங்களில் பார்க்க முடியவில்லை. அதனால் அப்போது அதனைப்
பார்ப்பதற்கான எந்தவித ஏற்பாடும் அப்போது செய்யப்படவில்லை.
இருபது வயதில் வெள்ளி மறைப்பு ரசித்த ஜெரேமையா ஹோரோக்ஸ். . !
வெள்ளி மறைப்பை முதன் முதல் பார்த்த
நிகழ்வை ஏற்பாடு செய்தவர் ஜெரேமையா ஹோரோக்ஸ் (Jeremiah Horrocks) என்ற
இருபதே வயது நிரம்பிய இளம் விஞ்ஞானிதான். இவர் இங்கிலாந்தில் உள்ள
பிரிச்டனுக்கு(Preston in England) அருகிலுள்ள மூச் ஹூல் (Carr House in
Much Hoole) என்னும் ஊரிலுள்ள அவரது வீட்டிலிருந்து 1639, டிசம்பர் 4 ம்
நாள்வெள்ளி மறைப்பைக் காண்பிக்க ஏற்பாடு செய்தார். ஆனால் அவரது நண்பர்
வில்லியம் கிராப் த்ரீ ( William Crabtree) இதே வெள்ளி மறைப்பை
மான்செஸ்டருக்கருகில் பொரௌக்டனில்( Broughton, near Manchester) கண்டு
களித்தார். ஆனால் இதில் ஒரு துரதிருஷ்டம் நிகழ்ந்தது. என்ன தெரியுமா?
1631ல் வருகை தரப்போகும் வெள்ளி மறைப்பையும், 1761ல் தெரியப்பட இருக்கும்
வெள்ளி மறைப்பையும் கணித்துச் சொன்ன ஜோஹான்னஸ் கெப்ளர், 1639ல் வரப்போகிற
வெள்ளி மறைப்பை எப்படியோ கணிக்கத் தவறி விட்டார்.
ஹோரோக்ஸ், கெப்ளரின் வெள்ளி மறைப்பு
பற்றிய கணக்கீட்டை சரி செய்தார். அவரே, இந்த வெள்ளி மறைப்பு 121
ஆண்டுகளுக்கிடையிலும், ஒரு முறை ஜோடி மறைப்புகளாக 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை
வந்து குதிக்கிறது என்றும் கண்டறிந்து சொன்னார். ஹோரோக்ஸ்தான் ஆங்கிலேயே
வானவியல் விஞ்ஞானிகளின் தந்தை என்றும் போற்றப்படுகிறார். இவர் அவரது நண்பர்
வில்லியம் கிராப்த்ரீஎன்ற விண்மீன்களை ஆராயும் துணிவிற்பனை செய்பவருடன்
இணைந்து இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். அதனால்தான் ஹோரோக்ஸ் 1639ல்
வந்த வெள்ளி மறைப்பை ஐரோப்பிய மக்களுக்கு காண்பிக்கச் செய்து மகிழ்ந்தார்.
அவரால் எந்த நேரம் வரும் என்று துல்லியமாகக் கணிக்க முடியவில்லை என்றாலும்,
உத்தேசமாக மதியம் சுமார் 3 மணிக்கு வெள்ளி மறைப்புத் துவங்கும் என்றார்.
ஹோரோக்ஸ் வெள்ளி மறைப்பு நிகழ்வு
நடைபெறும்போது, புத்திசாலித்தனமாக சூரியனின் பிம்பத்தை, எளிய தொலைநோக்கி
மூலம் ஒருவெள்ளை அட்டைத் துண்டின் மேல் விழச் செய்து, (அன்றைக்கே மிகப்
பாதுகாப்பாக) வெள்ளி மறைப்பை மக்களுக்குக் காண்பித்தார். அன்று இயற்கையின்
அதிர்ஷ்டம் அவர் பக்கம் சாய்ந்து கொட்டியது. ஏனெனில் அன்று மேகமற்ற சூரியனை
மாலை 3.15 லிருந்து 4.30 வரை அதாவது சூரிய மறைவு 5 மணி எனும்போது, அதற்கு
அரை மணி நேரம் முன்பு வரை வெள்ளி மறைப்பு அழகாகத் தெரிந்தது. ஹோரோக்ஸின்
வான்நோக்கு கணிப்பு என்பது சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலுள்ள தூரத்தைத்
துல்லியமாக கணிக்க மிகவும் உதவியது. இதன் தூரம் 59.4 மில்லியன் மைல்கள்,
0.639 வானவியல் அலகு. ஆனாலும் கூட, இந்த வானவியல் கணிப்பு 1661 வரையிலும்,
ஹோரோக்ஸ் இறக்கும் வரை வெளியிடப்படவே இல்லை.
கிரிகாரியின் வெள்ளி மறைப்புக் கணிப்பு
ஜேம்ஸ் கிரிகாரி என்ற ஸ்காட்டிஷ்
கணிதவியலாளர் அவரது புத்தகத்தில் புதன் மறைப்பு பற்றி தெளிவாக எழுதி
உள்ளார். சூரியனை, புதன் 88 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. பூமி,
புதன், சூரியன் ஆகியவை 116 நாட்களுக்கு ஒரு முறை நேர்க்கோட்டில்
சந்தித்தாலும், கோள் மறைவு ஏற்படுவதில்லை. பூமியின் சுற்று வட்டப்பாதையில்
இருந்து, புதன் ஏழு டிகிரி கோண சாய்வாக உள்ளது. புதனின் பாதை, பூமி வலம்
வரும் தளத்தினை, இரண்டு புள்ளிகளில் தான் வெட்டும். அந்த புள்ளிகளில்
ஏதேனும் ஒன்றில் சூரியன், பூமி மற்றும் புதன் ஆகியவை நேர்க்கோட்டில்
சந்தித்தால் மட்டுமே புதன் மறைவு ஏற்படும். ஒரு நூற்றாண்டில், 13 முறை
புதன் கோள் மறைப்பு ஏற்படும்.
புதன் மறைப்பு மூலமும் சூரியன் பூமிக்கு
இடையில் உள்ள வானவியல் அலகைக் கணிக்க பயன்படுத்த முடியும் என்றும்
தெரிவித்தார். இதன் உண்மைகளை உணர்ந்த எட்மன்ட் ஹாலி இதைப் போன்ற மறைப்பை
செயின்ட் ஹெலேனாவிளிருந்து 1676ல் பார்த்தார். அடுத்த வெள்ளி மறைப்பு
1761ல் வரும் அதன் மூலம் சூரியன்-பூமி தொலைவை துல்லியமாகக் கணக்கிடலாம்
என்று காத்திருந்தார். ஆனால் ஹாலி 1742ல் இந்த உலகைவிட்டு மறைந்தார். அவர்
சொன்ன கணக்கீட்டை மனதில் கொண்டு, ஹாலி தெரிவித்தபடியே , 1761ல் உலகில் பல்
விஞ்ஞானிகள் ஏராளமான ஏற்பாடுகள் செய்தன்ர். அதனால் முதன் முறையாக உலகின்
பல பகுதிகளிலிருந்து சர்வதேச அறிவியலாளர்களின் உதவியுடன் ஒருங்கிணைப்பு
செய்து வெள்ளி மறைப்பைக் கண்டு களித்தனர்.
இது போன்ற முதன் முதல் ஜோடி வெள்ளி
மறைப்பை பிரிட்டன், ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்த
விஞ்ஞானிகள் பார்த்தும், பதிவு செய்யவும், சைபீரியா, நார்வே,
நியூபவுன்ட்லாந்து மற்றும் மடகாஸ்கர் போன்ற இடங்களுக்குச் சென்றனர்.
அங்கிருந்து, வெள்ளி மறைப்பைப் பார்த்து ரசித்ததுடன் பதிவும் செய்தனர்.
பெரும்பாலோர் குறைந்த பட்சம் பகுதி மறைப்பையாவது பார்த்தனர். ஆனால் சிலர்
வெற்றிகரமாக வெள்ளி மறைப்பை பார்த்தவர்களில் நன்னம்பிக்கை முனையிலிருந்து
பார்த்த ஜெரேமையா டிக்சன் (Jeremiah Dixon ) மற்றும் சார்லஸ் மேசன்(Charles
Mason ) என்பவர்கள் முக்கியமானவர்கள்.
வெள்ளியின் வளிமண்டலம் பார்த்த மிக்கைல். . !
பிட்டர்ஸ்பர்க் (Petersburg )
வானோக்கத்திலிருந்து 1761ல் வெள்ளி மறைப்பைப் பார்த்ததின் அடிப்படையில்
மிக்கைல் லோமொனோசொவ்(Mikhail Lomonosov ) என்ற விஞ்ஞானி, வெள்ளிக் கோளில்
வளிமண்டலம் இருப்பதை உறுதி செய்தார். மேலும் வெள்ளி மறைப்பின் போது
நிகழ்ந்த சூரியக்கதிர்களின் ஒளி விலகலினால் வெள்ளியின் பகுதியும், அதன்
மேல் வளையமான வளிமண்டலமும் தெரிந்தன. பின்னர் 1769ல் நடைபெற்ற வெள்ளி
மறைப்பில், கனடாவிலுள்ள ஹட்சன் வளைகுடா, பாசா கலிபோர்னியா மற்றும் நார்வே
பகுதிகளுக்கு விஞ்ஞானிகள் பயணித்து வெள்ளி மறைப்பைப் பார்த்தனர். அது
மட்டுமல்ல, முதல் கப்பல் பயணம் செய்த கேப்டன் குக்கும்(Captain Cook) கூட
தஹிதியிலிருந்து(Tahiti ) வெள்ளி மறைப்பைப் பார்த்தார். குக் பார்த்த இடம்
இன்றும் கூட, வெள்ளியின் முனை ("Point Venus")என்றே அழைக்கப்பட்டு, அங்கே
அதன் அடையாளச் சின்னமாக ஒரு தூண் வைக்கப்பட்டுள்ளது.
அப்போதே, செக்கோஸ்லோவாக்கிய விஞ்ஞானி,
கிறிஸ்டியன் மேயர் கேத்தேரினால் அழைக்கப்பட்டு, செயின்ட்
பீட்டர்ஸ்பார்க்கில் அன்டெர்ஸ் ஜொஹான் லேக்செல், ருஷ்ய அறிவியல் கழக
உறுப்பினர்கள் போன்றோர் மேலும் 8 இடங்களுக்கு சென்று வெள்ளி மறைப்பைப்
பார்த்தனர். பிலடெல்பியாவிலும், வெள்ளி மறைப்பைக் காண மூன்று தாற்காலிக
வானோக்கு இடங்களும் மற்றும் இதனைப் பார்வையிட டேவிட் ரிட்டன்ஹௌஸ் தலைமையில்
ஒரு குழு அமைக்கப்பட்டு வெள்ளி மறைப்பைப் பார்க்க பிரமாதமான ஏற்பாடு
செய்யப்பட்டது. இந்தப் பார்வையாளர்களின் கருத்துக்கள், பதிவுகள், தகவல்கள்,
முடிவுகள் போன்றவை 1771ல் தான் முதன் முதல் அச்சில் ஒரு தொகுப்பாக வந்தன.
சாதாரண மக்களுக்கும் வெள்ளி மறைப்பு பற்றித் தெரிந்தது.
வெள்ளி மறைப்பைப் பார்த்த முதல் மன்னர் மூன்றாம் ஜார்ஜ். . !
ரிச்மன்ட் என்ற இடத்திலுள்ள ராயல் வான்
நோக்ககம், சர் வில்லியம் சாம்பர்ஸ் என்பவரால் மூன்றாம் ஜார்ஜ் மன்னருக்காக
வடிவமைக்கப்பட்டது. மன்னர் அறிவியலின் பல விஷயங்களிலும், குறிப்பாக
வானவியலிலும் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இவர்தான் அரச குடும்பத்தில்
உள்ளவர்களில், 1769ல் வந்த வெள்ளி மறைப்பைப் பார்த்து பரவசப்பட்டவர். அதன்
பின் மன்னரும், அவரது அரச குடும்பமும் வெள்ளி மறைப்பு பற்றி விரிவாக தகவல்
எழுதி வைத்தனர். அப்போது தொலைநோக்கியும், கடிகாரமும் இருந்ததால் 1769ல்
வந்த வெள்ளிமறைப்பைப் பற்றி நல்ல பதிவினைச் செய்தனர்.
வெள்ளி மறைப்பும், சோக சித்திரமான கெல்லாமே லே ஜென்டிலும்..!
கெல்லாமே லே ஜென்டில் என்ற பிரெஞ்சு
விஞ்ஞானியின் முழுப் பெயர் Guillaume Joseph Hyacinthe Jean-Baptiste Le
Gentil de la Galaisière என்பதாகும். இப்படி மிக நீண்ட பிரெஞ்சுப் பெயருடைய
பிரெஞ்சு விஞ்ஞானி ஜென்டில் வெள்ளி மறைப்பைப் பார்க்க சுமார் 8 ஆண்டுகள்
கப்பலில் பயணம் செய்தார். அவர் வான நிகழ்வைப் பார்த்தாரோ இல்லையோ, நிறைய
சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்தார் விஞ்ஞானி ஜென்டில். அவர் 1760,
மார்ச்சில் பாரிசிலிருந்து புறப்பட்டு சூலைமாதம் மொரீஷியஸ் அடைந்தார். பின்
பாண்டிச்சேரி போனார். கொரமாண்டல் கடற்கரையைச் சுற்றிவர 1761ல் மீண்டும்
பயணம். ஆனால் அப்போது பிரிடிஷ்காரர்கள் பாண்டியைப் பிடித்துக் கொள்ள,
மீண்டும் பிரான்ஸ் நோக்கியே வந்தார்.
1769, ஜூன் 4 ம் நாள் காலை முழுவதும்
வானம் பளிச்சென்று துடைத்துவிட்டது போன்று இருந்தது. அதற்கு முன் மாதம் கூட
வானம் அழகுடன் மிளிர்ந்தது. ஆனால் அன்று திடீரென்று மேகம் சூழ்ந்தது.
ஜென்டிலால் எதனையும் பார்க்க முடியவில்லை. தனது துரதிருஷ்டம் எண்ணி மனம்
நொந்து பிரான்ஸ் செல்ல முடிவு செய்தார். பயணத்தின் முதல் நாள் அவருக்கு
வயிற்றுப்போக்கு. பயணம் தள்ளிப்போனது. பின்னர் அவரது கப்பல் புயலில்
போர்பனில் மாட்டிக்கொண்டது. அங்கேயே ஸ்பானிஷ் கப்பல் வரும்வரை
காத்திருந்தார். முடிவாக பாரிசுக்கு திரும்பியது 1771, அக்டோபர்.
ஆனால் அங்கே ஜென்டில் சட்டப்படி இறந்தவராக
அறிவிக்கப்பட்டிருந்தார். என்ன கொடுமை! அவரது மனைவி அவர் இறந்துவிட்டார்
என்று நினைத்து, மறுமணம் செய்து கொண்டார். அதன்பின் முயற்சி செய்து
அறிவியலின் ராயல் கழகத்தில் சேர்ந்தார். அதன் பின்னர் ஜென்டில் மறுமணம்
செய்து கொண்டு, அடுத்து 21 ஆண்டுகள் வரை உயிருடன் வாழ்ந்தபின்னரே உயிர்
நீத்தார். ஆனால் அவரது ஆயுளில் அவர் 8 ஆண்டுகள் வெள்ளி மறைப்பைப் பார்க்க
முயற்சித்தும், அதனைக் காணாமலேயே போனார். அவரை மையமாக வைத்து வெள்ளி
மறைப்பு என்ற படம் மௌரீன் ஹன்டர் என்ற கனடா நாட்டுக்காரரால் எடுக்கப்பட்டு,
1992ல் வெளியானது.
வெள்ளி மறைப்பும், கருப்பு பின்புல விளைவும்..!
ஜெரோம் லலாண்டி என்ற பிரெஞ்சு விஞ்ஞானி
1761 & 1769 ஆண்டுகளின் வெள்ளி மறைப்பு பதிவுகளைக் கொண்டு, ஆய்வு
செய்து ஒரு வானியல் அலகின் தொலைவு 15.3 கோடி கி.மீ (±1 million km) என
1771ல் கணித்தார். இதன் துல்லியத் தன்மை என்பது, அதன் வளிமண்டலத்தால்
தெரியும் கருப்பு பின்புல விளைவால் (Black back drop) கொஞ்சம் குறைவாகவே
உள்ளது. ஆனால் பின்னர் வந்த ஹாரோக்ஸ் கணக்குப்படி கொஞ்சம் முன்னேற்றம்
அடைந்தது.
வெள்ளி மறைப்பில் பிரெஞ்சு விஞ்ஞானி ஜீனின் வேதனைகள்!
பிரெஞ்சு கடல் பயணத்தை மேற்கொண்ட ஜீன்
சாபி டி ஆடோடோக்க் தலைமையிலான குழு ஒன்று 1761ல் நிகழவுள்ள வெள்ளி
மறைப்பினைக் காண சைபீரியாவிலுள்ள டோபோல்ச்க் நோக்கி பயணித்தது. ஆனால்
அந்தக் குழு ஒரு ஆற்றைக் கடக்கும்போது, பெரிய பிரச்சினையில் சிக்கித்
தப்பித்தது. அது ஒரு நீண்ட, துன்பங்கள் பல இருந்த மோசமான பாதைகளில்
மேற்கொண்ட கடினமான பயணம். இருப்பினும் வெள்ளி மறைப்பின் 6 நாட்களுக்கு
முன்பே அங்கு சென்றுவிட்டனர். வெள்ளி மறைப்புக்குக் கொஞ்ச நேரம் முன்பு,
ஜீன் அங்குள்ள உள்ளூர் மனிதர்களால் தாக்கப்பட்டார். காரணம் என்ன தெரியுமா?
ஜீன் சூரியனின் கதிர்களை ஏதோ செய்து தடை செய்யப் போகிறார் என்றும், அதனால்
அவர்களுக்கு வரவிருக்கும் வசந்தகால் நீரூற்றுக்கள் தடைபடும் என்றும்
நம்பியதால் வந்த விளைவு இது.
ஆனாலும் வானவியல் குழுவினர் ஜீனைக்
காப்பாற்றிவிட்டனர். பின்னர் அவர்கள் அருமையான வெள்ளி மறைப்பை தரிசனம்
செய்தனர். பிரெஞ்ச் கழகம் 1761ல் கிடைத்த வெற்றி கண்டு மகிழ்ந்தது.
மீண்டும் ஜீனை 1769ல் நிகழவுள்ள வெள்ளி மறைப்பைக் காண அனுப்பியது. அவர்கள்
மெக்சிகோவிலுள்ள வீர க்ரூஸ் என்ற இடத்திற்குப் போனார்கள். அங்கு மக்கள்
பிளேக் நோய் வந்து மிகவும் அல்லலுற்றனர். அங்கிருந்து அவர்கள் பாதுகாப்பான
இடத்திற்கு செல்லாமல், மக்களுடன் தங்கி அவர்களுக்கு உதவி செய்தனர். ஜீனும்
மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இறப்பின் எல்லை வரை சென்று அதன்பின் வெள்ளி
மறைப்பை எந்த அட்ச ரேகையில் எந்த தீர்க்க ரேகையில் நிகழ்ந்தது என்றும்
துல்லியமாகப் பதிவு செய்தார். அவரின் பதிவுதான் 1769ல் நிகழ்ந்த வெள்ளி
மறைப்பின் மிக நல்ல பதிவென்றும் பாராட்டப்படுகிறது. பின்னர் வெள்ளி மறைப்பு
நடந்த கொஞ்ச நாளிலேயே தனது 41 வயதில் காய்ச்சலினால் காலமானார்.
துருக்கியின் ஆண்டர்ஸ், வெள்ளி மறைப்பு பதிவுகள். . !
புத்திசாலியான வானவியலாளரும், இயற்கை
தத்துவ பேராசிரியருமான ஸ்வீடிஷ் விஞ்ஞானியான ஆண்டர்ஸ் பிலான்மேன்
துருக்கியின் பல்கலையின் பணிபுரிந்தார்.
18 ம் நூற்றாண்டில் நிகழ்ந்த வெள்ளி
மறைப்புகளைப் பற்றி அவர் பார்த்தது உட்பட பல கட்டுரைகள் எழுதினார்.
பிலான்மேன் 1761 மற்றும் 1769 ல் ஏற்பட்ட வெள்ளி மறைப்புகளை பின்லாந்தின்
கஜனேபோர்க் நகரிலிருந்து நன்கு கவனித்தவர். இந்திய வானவியலாலரான அன்கிட்டம்
வேங்கட நரசிங்க ராவ் என்பவர் விசாகப்பட்டினத்தில் தனக்கென்று ஒரு வானவியல்
கூடம் வைத்திருந்தார். அங்கிருந்து 1874ல் வந்த வெள்ளி மறைப்பை பதிவு
செய்து, பின் அதனைப்பற்றி எழுதி ராயல் வானியல் கழகத்திற்கு சமர்ப்பித்தார்.
அந்த தகவல் 1875ல் வெளியிடப்பட்டது.
அதன் பின்னர் 1874 மற்றும் 1882ல்
நிகழ்ந்த ஜோடி வெள்ளி மறைப்புகள் இன்னும் துல்லியமாய் கணிக்கப்பட்டும்,
பார்க்கப்பட்டும், பதிவு செய்யபட்டும் உள்ளன. இதில் 1874 டிசம்பர் 6ம் நாள்
வந்த வெள்ளி மறைப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்த
மறைப்புதான் முதன் முதல் படம் எடுக்கப்பட்டது. சார்லஸ் பர்ட்டன்(Charles
Burton) என்பவர் இதனை படம் எடுத்தார். சார்லஸ் டப்ளினிலிருந்து இந்தியப்
பெருங்கடலிலுள்ள ரோட்ரிகஸ் தீவுக்குப் பயணித்து இந்த பணியினைச் செய்தார்.
இந்தப் பயணம் கிரீன்விச்சிலுள்ள ராயல் வான் நோக்ககத்தால் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. உலகின் பல்வேறு நாடுகளில் 1874ம் ஆண்டு வெள்ளி
மறைப்பைப் பார்த்தனர். அமெரிக்க வானவியலார் சைமன் நேயூகொம்ப் கடந்த 4
வெள்ளி மறைப்புத் தகவல்களை இணைத்து சூரிய-பூமி தூரம் என்பது 14.959 கோடி
கி.மீ (±0. 31 million kilometers) என நிர்ணயித்தார். நவீன கருவிகள்,
தொழில்நுட்பங்கள் போன்றவை சூரியன் பூமி தூரத்தை ±30 மீட்டரில் என இப்போது
துல்லியமாகக் கணக்க்கிட்டுவிட்டன.
சமீபத்தில் 2004 ஜூன் 8ல் நிகழ்ந்த
வெள்ளி மறைப்பு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளி மறைப்பு என்றே
சொல்லவேண்டும். ஏனெனில், ஊடகத்துறை வந்த பின்னர் நிகழ்ந்த முதல் வெள்ளி
மறைப்பு இதுதான். இதற்கு முன் சரியாக 118 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த
வெள்ளி மறைப்பு 1882, டிசம்பர் 6ம் நாள் அயர்லாந்துப் பகுதியில் மட்டும்
தெரிந்தது. அங்கு ஆர்மக் வான் நோக்ககத்திலிருந்து (Armagh Observatory )
டாக்டர் ஜெல் டிரெயர் (Dr JLE Dreyer (of New General Catalogue) fame!)
மற்றும் அவரது உதவியாளர் ரேவெரன்ட் சார்லஸ் பேரிஸ் (Rev. Charles Faris)
கவனித்தனர். ஆனால் துவக்கத்தில் பனிப் பொழிவால் வெள்ளி மறைப்பைக் காண
இயலவில்லை. டப்ளின் வான நோக்ககத்தில் சர்.ராபர்ட் பால் பார்த்தார். அங்கும்
பனிப் பொழிவு வெள்ளி மறைப்பைக் காணவிடாமல் சதி செய்தது. ஆனால் தரமோனா
ஆய்வகத்தில் வில்லியம் என்ற விஞ்ஞானி, வெள்ளி மறைப்பின் இறுதி நிகழ்வுகளைப்
பார்த்ததுடன் நூற்றுக்கணக்கான படங்கள் எடுத்துப் பதிவும் செய்தார். ஆனால்
அவற்றுள் ஒன்று கூட இன்று இல்லை என்பது வருத்தமான தகவல்தான். இது வெள்ளி
மறைப்பு பற்றிய ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தது. வெள்ளி சூரியனின் மேல்
ஊர்ந்து வலம் வரும்போது, சூரியப் பிரகாசம் என்பது குறைகிறது என்பதும்
அப்போது அறியப்பட்டது. எவ்வளவு குறைகிறது என்றும் கணக்கிடப்பட்டது. வெள்ளி
சூரியனின் ஒளியை 0.001 பிரகாசம் (magnitude) ஆகக் குறைக்கிறது என்பது
தெரிந்தது. 2004ம் ஆண்டின் வெள்ளி மறைப்பை, ஐரோப்பா, ஆசியா மற்றும்
ஆப்பிரிக்க நாடுகளின் மனிதர்கள் நன்கு கண்டு ரசித்தனர். வடகிழக்கு
அமெரிக்கா வாழ் மக்கள், வெள்ளி மறைப்பு முடியும் தறுவாயில்தான் பார்த்தனர்.
வடமேற்கு அமெரிக்கா, ஹவாய் தீவு மனிதர்கள், நியூசிலாந்த்துக்காரர்கள்
வெள்ளி மறைப்பைக் காணும் பாக்கியம் பெறவில்லை. அங்கெல்லாம் தெரியவில்லை.
கடந்த 400 ஆண்டுகளில் வருகை புரிந்த வெள்ளி மறைப்புகள். . !
விஞ்ஞானிகள் தொலைநோக்கி கண்டு பிடித்து
வானை ஆராயத் துவங்கிய பின் வெறும் 7 வெள்ளி மறைப்புகளை மட்டுமே கண்டனர்.
அவை 1631 , 1639 ,1761, 1769, 1874, 1882 & 2004 ஆண்டுகளில் நடந்த
வெள்ளி மறைப்புகளே. இவை 1631-1639 ஜோடி மறைப்புக்கள். அதுபோல 1761-1769
ஜோடி மறைப்புக்கள்; அதுவேதான் 1874-1881 ஜோடி மறைப்புக்கள்; பின்னர்
இப்போது வந்த, வரப்போகும் 2004-2012 வெள்ளி மறைப்பு நிகழ்வுகளும் ஜோடி
மறைப்புக்களே! கி.மு 2000த்திலிருந்து, கி.பி 4000 வரை 6000 ஆண்டுகளில் 81
வெள்ளி மறைப்பு நிகழ்வுகளே நடந்துள்ளன.
பொதுவாக வெள்ளி மறைப்பு 8 ஆண்டுகளில் ஒரு
ஜோடி மறைப்புகள் என்றே உருவாகின்றன. அதுவும் கூட இப்படி ஜோடியாக அமையாத
வெள்ளி மறைப்புகளும் உண்டு. 1396ம் ஆண்டு நிகழ்ந்த வெள்ளி மறைப்பு
ஒத்தையாகவே வந்து போனது. அதற்கு ஜோடி 1404ல் வரவே இல்லை. அடுத்து 1508 வரை
ஒரு வெள்ளி மறைப்பு. இனி அடுத்த ஒத்தை வெள்ளி மறைப்பு இன்னும் 1087
ஆண்டுகளுக்குப் பின் அதாவது, 3089ல் வரவிருக்கிறது.
வெள்ளி மறைப்பில் சில அரிதான சுவாரசியங்கள்!
விஞ்ஞானிகள் வேறு சூரிய மண்டலங்களின்
வியாழன் போன்ற பெரிய கோள்களை வெள்ளி மறைப்பின் மூலம் அறிய முடியும் என்று
நம்புகின்றனர். சூரிய கிரகணமும், வெள்ளி மறைப்பும் ஒரே காலக்கெடுவில்
நிகழ்ந்து மக்களை ஆச்சரியத்தில் பிரமிக்க வைத்தும், மூழ்கடித்தும்
இருக்கிறது. சுமார் 17,607 ஆண்டுகளுக்கு முன் இது போன்ற நிகழ்வு வந்தது.
அதே போல இன்னும் 5,15,232 ஆண்டுகளுக்குப் பின் ஒரு வெயில் கால ஏப்ரல் மாதம்
5ம் நாள் சூரிய கிரகணமும், வெள்ளி மறைப்பும் கைகுலுக்க காத்திருக்கின்றன.
அது மட்டுமல்ல வெள்ளி மற்றும் புதன் மறைப்புகளும் கூட ஒரே
காலத்தில்/நேரத்தில் நிகழ்வதும் உண்டு. இரண்டும் பூமியின் உள்வட்டத்தில்
வட்டமிடும் கோள்கள் அல்லவா?கி.மு. 3,73,173ல் வெள்ளியும், புதனும் ஒருங்கே
சூரிய வட்டத்துக்குள் நுழைந்து ஓடிப்பிடித்து விளையாடின. அது போன்றதொரு
அடுத்த நிகழ்வு, கி.பி 26,163ல் ஜூலை 26ம் நாள் நிகழ இருக்கிறது. ஒருக்கால்
மனித இனம் இந்த மறைப்புகளை எல்லாம் பார்க்க பூமியைத் தாண்டி தொலைதூரம்
சென்றிருந்தும் காணுமோ? அல்லது சூரியனைச் சுற்றி வட்டமடித்துப் பார்த்து
ரசிப்பார்களோ? நாளை உருவாக உள்ள நவீன அறிவியல் முன்னேற்றம் எது
வேண்டுமானாலும் செய்யும்.
மா வெடிப்பு (BIG BANG) ஓர் ஆரம்பமா அல்லது தொடர்கதையா?
விஞ்ஞான உலகத்தின் மிகப் பெரிய சாதனை,
நாம் வாழும் பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்ற கோட்பாட்டை விஞ்ஞானிகள்
கண்டறிந்ததுதான் என்று பலர் அறிவர்.
அதிசயமும், ஆச்சர்யமும் கொண்ட அந்த
கோட்பாடு கூறியது என்னவென்றால் சுமார் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மிக
மிக அதிக வெப்பமும், மிக மிக அதிக அடர்த்தியும் கொண்ட அணு அளவு சிறிய
வடிவிலிருந்து ('பிக் பேங்' என்றழைக்கப்படும்') ஒரு 'மா வெடிப்பின்',
விரிவாக்கத்தினால்தான் இந்த பிரபஞ்சம் தோன்றியது என்பதாகும்.
'காலமும்', 'வெளியும்' அந்த
மாவெடிப்பிலிருந்துதான் உருவாகின என்று நாம் கற்பனையிலும் நினைக்கமுடியாத
உண்மையினை அந்த கோட்பாடு கூறியது.
மா வெடிப்புக்கு முன்பு என்ன நடந்தது
என்று தெரியவில்லை என்றும் கூறினர். ஆரம்ப கட்ட சில எதிர்ப்புக்களுக்குப்
பிறகு விஞ்ஞான உலகம் அதை ஏற்றுக்கொண்டது. அந்தக் கோட்பாடு கூறிய மா
வெடிப்பு நடந்ததற்கு ஆதாரங்கள் பிறகு பெரும் முயற்சிக்குப் பிறகு
கண்டுபிடிக்கப்பட்டன.
காரணம் இல்லாமல் ஒரு காரியமா?
ஆனால் ஒன்றுமில்லா (from nothing)
நிலையிலிருந்து இவ்வளவு பெரிய சீரான, விஞ்ஞான விதிகளுக்கு கட்டுப்பட்ட ஒரு
பிரபஞ்சம் உருவாகியதென்பதும், காலம் அப்போதுதான் தோன்றியதென்பதும் அந்த
கோட்பாடு கூறியது விஞ்ஞானிகளுக்கு ஒரு நெருடலாகவே இருந்து வந்தது. காரணம்
இல்லாமல் ஒரு காரியம் நடக்காது. அதாவது மாவெடிப்பு ஒரு காரணம் இல்லாமல்
நடந்திருக்க முடியாது என்று சிந்திக்க ஆரம்பித்தனர்.
'பெண்களின் கூந்தலுக்கு ஒருக்காலும்
இயற்கையில் மணம் இருக்க முடியாது' என்று நக்கீரர் ஆணித்தரமாக கூறியது போல
'ஒன்றுமில்லா (from nothing) நிலையிலிருந்து இவ்வளவு பெரிய சீரான, விஞ்ஞான
விதிகளுக்கு கட்டுப்பட்ட' ஒரு பிரம்மாண்டமான பிரபஞ்சம் ஒருக்காலும் உருவாகி
இருக்கவே முடியாது என்றும் நம்பினர்.
பலர் இந்தக் கேள்விக்கு விடை தேடி
அலைந்தனர் -விளைவு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சில விஞ்ஞானிகள் இந்த மா
வெடிப்பு ஒரு தொடக்கமல்ல, ஒரு தொடர் கதைதான் என்கிறார்கள்..
அப்படியென்றால்?
நாம் கூறும் 1370 கோடி ஆண்டுகளுக்கு
முன்பு ஏற்பட்ட அந்த 'மா வெடிப்பு' முதல் முறையாக நடந்தது அல்ல, அது
தொடர்ந்து பல முறை நடந்து இருக்கின்றது -அதாவது ஒரு மா வெடிப்பிலிருந்து
ஒரு பிரபஞ்சம் உருவாகி அது போதிய அளவு விரிந்த பின், ஈர்ப்பு விசையினால்
பிரபஞ்சம் மீண்டும் சுருங்கி ஒரு புள்ளியாகி பிறகு மீண்டும் மாவெடிப்பு
ஏற்பட்டு விரிவடைகின்றது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வேறு சில விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் உள்ள
கருந்துளைகள் மூலமாக புதிய பல பிரபஞ்சங்கள் உருவாகின்றன என்றும்
கூறுகின்றனர். குழந்தைகள் சோப்பு நீரை உபயோகித்து சோப்பு முட்டைகளை
ஊதிவிடுவார்களே அதுபோல புதிய பிரபஞ்சங்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. நமது
பிரபஞ்சம் வேறு ஒரு பிரபஞ்சத்தின் கருந்துளையிலிருந்து 'மா வெடிப்பு'
அடைந்து வந்திருக்கும் என்றும் நாம் வாழூம் இந்த பிரபஞ்சத்திலிருந்து
கருந்துளைகள் மூலமாக வேறு பிரபஞ்சங்கள் தோன்றுகின்றன என்று
மெய்சிலிர்க்கவைக்கும் கோட்பாட்டினை கூறுகின்றனர். இக்கருத்துக்களை பல
விஞ்ஞானிகள் ஆதரிக்கின்றனர்.
புதிய பல பிரபஞ்சங்களா? கேட்கவே
ஆச்சர்யமாக இருக்கின்றது. நாம் வாழும் பிரபஞ்சம்தான், வேறு ஒன்றுமில்லை
என்று நினைத்துக் கொண்டிருந்த நமக்கு இது நம்பமுடியாமல் இருக்கின்றது.
விஞ்ஞானிகள் கூறும் இந்த வகையான புதிய
கோட்பாடுகளைப் பற்றி புரிய வேண்டுமென்றால் நாம் முதலில் மா வெடிப்பு
மற்றும் பிரபஞ்சத் தோற்றம் என்பதைப் பற்றி நன்கு அறிய வேண்டும். அது
தெளிவாகப் புரிந்தால் விஞ்ஞானிகள் கூறும் புதிய கோட்பாடாகிய 'பல
பிரபஞ்சங்கள்' எப்படி சாதியமாகும் என்று விளங்க முடியும்.
பிரபஞ்சத்தின் தோற்றம்
பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்றால்,
சந்தேகமேயில்லை, காலகாலமாக அப்படியே இருந்திருக்கின்றது; வரும்காலத்திலும்
அதன் கோலம் மாறாது என்று தான் பலரும் உறுதியாக நினைத்துக் கொண்டிந்தனர்.
'இதற்கு ஒரு துவக்க்கமா? ஆச்சரியமாக
இருக்கின்றதே' என்று விஞ்ஞானிகள் கூறியதைக் கேட்டு வியந்தவர்களுக்கு அது
துவங்கிய விதத்தைக் கேட்டவுடன், அதை நம்பவே முடியவில்லை. அப்படி என்ன
கூறினார்கள்?
பிரபஞ்சம் ஆரம்பத்தில் ஓர் அணு
அளவிலிருந்து இப்போது நாம் காணும் அளவு பெரியதாய் ஆகி இருக்கின்றது என்று
கூறினர். ஒரு புள்ளியிலிருந்து பிரபஞ்சமா? நம்புவது மிக மிகக் கடினம்தான்.
இப்படித்தான் பூமி தட்டையில்லை உருண்டைதான் அல்லது பூமிதான் சூரியனைச்
சுற்றி வந்துகொண்டிருக்கின்றது என்று அறிஞர்கள் கண்டறிந்து கூறியபோது
முதலில் நம்ப முடியவில்லைதான்.
பிரபஞ்சத்தின் பிரமாண்டம் பற்றி நாம்
இங்கு தெரிந்துகொள்ளல் அவசியம். பரந்து விரிந்த கடல்களையும், காடுகளையும்,
மலைகளையும் கொண்ட நாம் வாழும் இந்த பூமியின் தோற்றமே நம்மை பிரமிக்க
வைக்கின்றது. இந்த பூமி போல பத்து லட்சம் பூமிகளை உள்ளடக்கக்கூடிய அளவு
பெரியது நமது சூரியன். இந்த சூரியனைச் சுற்றி எட்டு கிரகங்கள், அதற்கு
நிலவுகள். கடைசி கிரகம் நெப்டியூன் சூரியனிலிருந்து 450௦ கோடி கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது. அதற்குப் பிறகு ப்ளுட்டோ என்ற சிறிய கிரகமும் மற்றும்
எண்ணிலடங்கா விண்கற்களும், வால் நட்சத்திரங்களும் கொண்ட இந்த சூரிய
குடும்பமே மிகப் பெரியது.
நம் சூரியனைப்போல சுமார் நானூறு கோடி
நட்சத்திரங்களைக் கொண்டது நம் சூரியன் இருக்கும் பால்வெளி மண்டலம். நமது
சூரியனைக் காட்டிலும் பல ஆயிரம் மடங்கு பெரிய நட்சத்திரங்களும் உள்ளன. நமது
பால்வெளி மண்டலத்தின் குறுக்களவு எவ்வளவு தெரியுமா? மணிக்கு சுமார் மூன்று
லட்சம் கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடிய ராக்கெட் கிடைத்தால், அதில்
சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் பயணித்தால்தான், ஒரு முனையிலிருந்து மற்றொரு
முனைக்குச் செல்ல முடியும்.
நம் பால்வெளி மண்டலத்தைக் காட்டிலும் பல நட்சத்திர மண்டலங்கள் (கூட்டங்கள்) அளவில் பெரியவை.
பிரபஞ்சத்தை பிரமிக்க வைக்கும் பிரமாண்டம்
என்று கூறுவது ஏன் என்றால், இந்த பால்வெளி மண்டலம் போல் சுமார் நானூறு-
ஐநூறு கோடி மண்டலங்கள் கொண்டதுதான் 'நாம் அறிந்த' பிரபஞ்சமாகும். மனிதனுடைய
கற்பனை வளம் மிகப்பெரியது. ஆனால் எந்த கற்பனைக்கும் எட்டாததுதான் நமது
பிரபஞ்சத்தின் பிரமாண்டம். நம் பால்வெளி மண்டலத்திலிருந்து அடுத்துள்ள
மண்டலத்திற்கு தூரம் எவ்வளவு தெரியுமா? மணிக்கு மூன்று லட்சம் வேகம்
செல்லும் வாகனத்தில் புறப்பட்டால், அடுத்த மண்டலத்தை அடைய ஒரு சில லட்சம்
ஆண்டுகள் தான் ஆகும்.
அவ்வளவு பெரிய பிரபஞ்சம் ஒரு சிறிய அணு
அளவிலிருந்து வந்தது என்பது ஜீரணிக்கவே முடியாததுதான். அணு அளவிலிருந்து
அதி வேகமாக விரிவடைந்து வந்ததால் தான் அதை மாவெடிப்பு என்றார்கள்.
உண்மையில் இந்தக் கோட்பாட்டை சொன்ன விஞ்ஞானி மாவெடிப்பு என்ற வார்த்தையை
உபயோகிக்கவில்லை. இந்த கோட்பாட்டினை எதிர்த்த விஞ்ஞானி தான் இந்த
கோட்பாட்டை 'நையாண்டி' செய்யவே இப்படி பெயர் வைத்தார்.
இந்த கோட்பாட்டை பலர் எதிர்த்தனர். ஏன்
அழியாப் புகழ் கொண்ட மாபெரும் விஞ்ஞானி 'ஐன்ஸ்டீன்' முதலில் இதை
ஏற்றுக்கொள்ளவில்லை. தன் வாழ்வில் செய்த மிகப்பெரும் தவறு என்று
பெருந்தன்மையோடு ஒத்துக் கொண்டார் பிறகு.
மாவெடிப்புக்கு முன் 'வெளி' இல்லை
வெடிப்பு என்பது சத்தத்துடன் இணைந்தது
தான். ஆனால் அங்கே சத்தம் இல்லை. ஏன் என்றால் அங்கு வெளி இல்லை. வெளி
இல்லாததால் காற்றும் இல்லை. அதனால் சப்தம் இல்லை. sound வெளியிலுள்ள
காற்றினூடே சென்றால்தான் அந்த sound யை கேட்கமுடியும் .
என்ன 'வெளி' இல்லையா? காற்று இல்லையா?
என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஒரே பதில்தான். என்னவென்றால், பிரபஞ்சம்
ஆரம்பிக்கும்போது உலகில் நாம் இப்போது காணும் ஒரு பொருளுமே இல்லை. ஏன்
தூசியும் கூட இல்லை. ஆரம்பத்தில் பிரபஞ்சத்தில் சக்தி மட்டுமே இருந்தது.
சக்தி அணுதுகள்களாக மாறி அந்த அணுத்துகள்கள் அணுக்களாக மாறி நாம் காணும்
எல்லாப் பொருட்களுமாகி, மிருகங்களும் மனிதனும் ஆனது.
காலத்தின் துவக்கம்
காலங்காலமாக நாம் நினைத்துக்கொண்டிருந்தது
'காலத்திற்கு துவக்கமோ அல்லது முடிவோ இல்லை, அது எப்பொழுதுமே
இருந்துகொண்டிருக்கின்றது' என்றுதான். ஆனால் மாவெடிப்பிலிருந்துதான்
'காலம்' துவங்கியது என்பதை ஜீரணிப்பது கடினம். காலம் வேறு வேறு இடங்களில்
வேறு வேறு விதமாக நகருகின்றது என்றும் விஞ்ஞானிகள் கூறியதை தற்பொழுது
ஒத்துக்கொள்கிறார்கள்.
எப்படி இந்த வகையான முடிவுக்கு வந்தார்கள்?
தொலைநோக்கி கண்டுபிடிக்கும்வரை 'தொல்லை'
இல்லாமல் இருந்தது. தொலைநோக்கியை கண்டுபிடித்த குற்றவாளி கலிலியோ தான்.
அவரது தொலைநோக்கி நமது சூரிய குடும்பத்தின் உண்மையான நிலையை எடுத்துக்
காட்டியது. பின்னர், பல சக்தி வாய்ந்த, அதி நவீன தொலைநோக்கிகளை
கண்டுபிடித்தனர். 'மடை திறந்த வெள்ளம் போல' பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம்
பற்றி அறிய முடிந்தது.
அதில் மிக முக்கிய ஒரு கண்டுபிடிப்பு
என்னவென்றால் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கின்றது என்பதாகும்.
சூரியனைச் சுற்றும் கிரகங்களையும், கிரகங்களைச் சுற்றும் நிலவுகள் தவிர,
பிரபஞ்சம் அசைவின்றி, என்றென்றம் நிலையாக இருக்கின்றது என்ற பிரபஞ்சத்தைப்
பற்றிய நமது தவறான கருத்து உடைத்தெறியப்பட்டது.
பிரபஞ்சம் எல்லா திசைகளிலும் விரிவடைந்து
கொண்டிருக்கின்றது. நம் பால்வெளி மண்டலத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள
மண்டலங்கள் (galaxy) நம்மை விட்டு வெகு வேகமாக விரிவடைந்து நகர்கின்றன என்ற
செய்தி சில விஞ்ஞானிகளுக்கு, ஒரு உண்மையைப் புலப்படுத்தின. வேகமாக
விரிவடையும் இந்த பிரபஞ்சம் ஒரு காலகட்டத்தில் சிறியதாய் இருந்திருக்க
வேண்டும். ஒரு வெடிப்பிலிருந்து கிளம்பிப் பரவும் துகள்கள் போல
'மண்டலங்கள்' சிதறிப் பரவுவதால், பிரபஞ்சம் ஒரு வெடிப்பிலிருந்து தோன்றியது
என்று கோட்பாடு உருவாக்கப்பட்டது.
இந்தக் கோட்பாட்டினை உறுதிசெய்ய விஞ்ஞான
உலகம் பெரும் முயற்சியில் இறங்கியது. அப்படி ஒரு மாவெடிப்பு
நிகழ்ந்திருந்தால் அதன் கதிர்வீச்சு இன்றும் பிரபஞ்சம் முழுவதும் இருக்கும்
என்று கூறினர். பலர் அதனைத் தேடி அலைந்தபோதும் , தற்செயலாக பென்சியாஸ்,
வில்சன் என்ற இருவர் அதைக் கண்டுபிடித்தனர். பிரபஞ்சத்தின் எல்லாப்
பகுதியிலிருந்தும் மா வெடிப்பின் பின்விளைவான தேடப்பட்ட அந்த 'அண்ட
நுண்ணலைக் கதிர்வீச்சு' (cosmic microwave radiation) நம் பால்வெளி
மண்டலத்தையும் தாண்டி பிரபஞ்சத்தின் எல்லாப் பகுதிகளிலும் இருப்பதை அவர்கள்
கண்டறிந்ததால் அந்த மாபெரும் கண்டுபிடிப்புக்கு 1978ல் அவர்களுக்கு நோபல்
பரிசு வழங்கப்பட்டது.
பூமியின் நிலப்பரப்பிலிருந்து கிடைத்த
ஆராய்ச்சியின் முடிவு போதாதென, இந்த கோட்பாட்டை நூறு சதம் உறுதி செய்ய
மேலும் பிரபஞ்சத்தின் எல்லா குணாதிசயங்களையும் கண்டறிய அண்ட வெளிக்கு
மிகுந்த பொருட்செலவில் 'வில்கின்சன் மைக்ரோவேவ் அணிசோ ற்றோபீ பரோப் '
(wilkinson microwave anisotropy probe) என்ற அதிநவீன செயற்கைக்கோள்
2001இல் அனுப்பப்பட்டது
இந்த ஆராய்ச்சி பிரமிக்கத்தக்க வெற்றி
அளித்தது. பிரபஞ்சம் எப்போது ஆரம்பித்தது, டார்க் மேட்டர், டார்க் எனெர்ஜி
போன்ற பல புதிய விவரங்களையும் மிகத் தெளிவாக கொடுத்து, 'மா வெடிப்பு
கோட்பாட்டை' சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிசெய்தது
கருந்துளைக் கோட்பாடு
பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைப் பார்த்தோம்.
சுமார் 1370 கோடி ஆண்டுகளாக அது நிற்காமல் விரிவடைந்து கொண்டிருக்கின்றது.
ஒரு சில வினாடிகளில் அது சூரிய குடும்பத்தின் அளவு விரிவடைந்தது என்றால்
அந்த வேகம் என்னவென்று பார்த்துக் கொள்ளுங்களேன். இவ்வளவு ஆண்டுகளாக
விரிவடைந்த பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தைக் கற்பனை செய்து பாருங்களேன்.
இதைப் புரிந்துகொள்ள வேண்டுமேன்றால்,
நட்சத்திரங்கள் எப்படி உருவாகின, கருந்துளைகள் என்றால் என்ன என்று தெரிய
வேண்டும். இதைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல.. சிறிது கவனம் செலுத்தினால்
போதும், நீங்கள் பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் புரிந்துகொண்டவர் ஆவீர்கள்.
பிரபஞ்சம் தோன்றும் போது உருவாகிய சில
சக்திகளில் ஈர்ப்பு விசை (force of gravity) என்ற சக்தியும் ஒன்று. இந்த
சக்தி என்னவென்று யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை. வழுக்கி விழுந்தவர்கள்
நம்மில் பலபேர் இருக்கின்றார்கள். நம்மை பூமியை நோக்கி விழ வைப்பது
பூமியின் ஈர்ப்புவிசை. இந்த சக்தி இல்லை என்றால் என்ன ஆகும் என்பதைக்
காண்பது மிக அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். அதாவது நீங்கள்
மிதக்க ஆரம்பித்து விடுவீர்கள். உங்களைச் சுற்றிய எல்லாப் பொருட்களுமே
மிதக்க ஆரம்பித்து விடும். ஆபத்து என்னவென்றால், சூரியனைச் சுற்றிவரும்
நமது பூமி தனது வட்டப் பாதையை விட்டு 'வெளியில்' கட்டுப்பாடின்றி சுற்ற
ஆரம்பித்துவிடும். சூரியனின் அருகில் பூமி சென்றால் பூமியின் வெப்பம்
பலநூறு டிகிரிகளை எட்டும். சூரியனை விட்டு விலகிச் சென்றால் சூரிய ஓளி
இல்லாமல் முதலில் எல்லாப் பயிர்களும் பிறகு அதனை உண்டு வாழும்
மிருகங்களும், மனித குலமும் அழியும். முடிவில் சூரிய குடும்பத்தின் எல்லா
கோள்களும் சூரியனை விட்டு பிரிந்து சென்று விடும்.
இந்த ஈர்ப்பு விசையினால் தான்
நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. எப்படி என்று பார்போம். பிரபஞ்சம் ஆரம்பித்த
போது, முதலில் சக்தி அணுத்துகள்களாக மாறின, சில லட்சம் ஆண்டுகளுக்குப்
பிறகு அணுத்துகள்கள் இணைந்து அணுக்கள் தோன்றின. அவை பெருமளவு ஹைட்ரோஜென்
மற்றும் சிறிது ஹீலியம் என்ற வாயுக்களின் அணுக்களாகும். பிரபஞ்சமெங்கும்
இந்த இரண்டு வாயுக்கள் மட்டும் நிரம்பியிருந்தன. அவை தவிர ஆரம்ப
பிரபஞ்சத்தில் வேறு ஒன்றுமில்லை.
ஈர்ப்பு விசை தன் வேலையைத் துவக்கியது.
பிரபஞ்சத்தில் எல்லாப் பொருட்களுமே ஒன்றை ஒன்று ஈர்ப்பு விசையால் இழுத்துக்
கொள்ளும் என்பது விஞ்ஞானத்தின் விதி. இதை உறுதி செய்ய, முதலில்
ராக்கெட்டில் விண்வெளி சென்றபோது, ஒரு பாட்டிலில் உப்பு எடுத்துச்
செல்லப்பட்டது. பூமியில் உள்ளவரை தனித் தனி துகள்களாக இருந்த உப்பு,
அண்டவெளி சென்றவுடன் அவைகள் உடனே ஒன்றினை ஒன்று இழுத்து கட்டியாகிக்
கொண்டது. பூமி உருவாகியதே, சூரியனைச் சுற்றிவந்த பல மலைபோன்ற கற்கள் ஒன்றை
ஒன்று இழுத்து இப்படி இணைந்ததுதான்.
இதே போல பிரபஞ்சத்தில் உள்ள ஹைட்ரோஜென்
அணுக்கள் ஈர்ப்பு விசையால் ஒன்றை ஒன்று இழுத்து, பெரும் கூட்டாக இணைய
ஆரம்பித்தன. பெரும் கூட்டு என்றால் இந்த பூமியை விட லட்சக்கணக்கில்,
கோடிக்கணக்கில், பெரிய கூட்டுகளாகக் கூடி இணைய ஆரம்பித்தன. ஈர்ப்பு விசை
மேலும் மேலும் அணுக்களை நெருக்கமாக இழுத்தன. நெருக்கம் அதிகமாக அதிகமாக
வெப்பம் அதிகரித்தது. பல லட்சம் டிகிரி வெப்பம் அடைந்த உடன் அங்கே
'அணுச்சேர்க்கை' நடக்கத் தொடங்கியது .
இந்த அணுச்சேர்க்கையில் சிறிது mass
எனப்படும் பொருண்மை அழிக்கப்பட்டு சக்தியாக மாறும். ஒரே சமயம் பல லட்சம்
ஹைட்ரோஜென் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணையும்போது ஏற்படும் சக்தி பல லட்சம்
அனுகுண்டுகளுக்கு இணையாகும். ஒவ்வொரு வினாடியும் பல லட்சம் அணு
இணைப்புக்கள் மூலமாக வெளியாகும் சக்திதான் 'சூரிய சக்தி'. அதாவது அங்கே ஒரு
சூரியன் உருவாகிறது. நமது சூரியன் எனும் நட்சத்திரம் பூமியைப் போல பத்து
லட்சம் மடங்கு பெரிது. அவ்வளவு பெரிய வாயுக்கூட்டம்.
அந்த வாயுக்கூட்டதில் உள்ள எல்லா
ஹைட்ரோஜென் அணுக்களும் தீரும்வரை சூரியன் 'அணுச்சேர்க்கை' மூலமாக சூரிய
சக்தியான வெப்பத்தையும் ஒளியையும் கொடுக்கும். அது தீர்ந்துவிட்டால்,
பெட்ரோல் தீர்ந்த வண்டி போலத்தான். சூரியன் அழிந்துவிடும். பலர் நினைத்தது
போல சூரியன் (நட்சத்திரங்கள்) என்றும் நிலையான ஒரு சக்தி அல்ல. அதற்க்கும்
பிறப்பு உண்டு, அழிவும் உண்டு.
கருந்துளை என்றால் என்ன ?
சூரியனைவிட பெரிய நட்சத்திரங்களின்
வாழ்நாள் முடியும்போது 'கருந்துளை' உருவாகின்றன. நட்சத்திரங்கள் உருவாக
ஈர்ப்பு விசை காரணம் என்று கண்டோம். அந்த ஈர்ப்பு விசை தொடர்ந்து சூரியனை
சுருங்கவைத்து மேலும் மேலும் சிறிதாக்க எப்போதும், அதாவது, சூரியனின்
வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்துகொண்டே இருக்கும். ஈர்ப்பு விசைக்கு
தடங்கல் இல்லை என்றால் அது நட்சத்திரங்களை மிக மிக சிறியதாகிவிடும் . ஆனால்
நட்சத்திரம் சுருங்கும்போது அணுச்சேர்க்கையினால் அணுசக்தி உருவாகிறது
என்று கண்டோம். இந்த அணுசக்திதான் நட்சத்திரங்களை விரிடைய செய்கிறது . அணு
சக்தி நட்சத்திரத்தை விரிவடையச் செய்யும்பொது, ஈர்ப்பு விசை அதை
சுருங்கவைக்க முயலுகிறது. இந்த எதிர் எதிர் சக்திகளினால் நட்சத்திரங்கள்
அதே உருவில் இருக்கின்றன. நட்சத்திரங்களின் வாழ்நாள் முழுவதும் இந்த 'tug
of war' என்ற இழுபறி நடந்துகொண்டே இருக்கின்றது. ஆபத்து எப்போது வருகின்றது
என்றால் நட்சத்திரத்தின் எரிபொருளான ஹைட்ரோஜென் தீரும்போது, அணுசேர்க்கை
குறைந்து, அதனால் வரும் நட்சத்திரத்தை விரியச்செய்யும் அணுசக்தி வெளிப்பாடு
இல்லாத நிலை வரும்போது, ஈர்ப்பு விசையின் கை ஓங்கி நட்சத்திரம் சுருங்க
ஆரம்பிக்கிறது.
நமது சூரியன் என்ற 'பாக்டரி' நிற்கும்போது
அது வெள்ளைக் குள்ளன் அல்லது வெள்ளைக் குள்ளி என்ற பூமி அளவுள்ள ஒரு
நட்சத்திரமாக சுருங்குகிறது. ஆனால் நமது நட்சத்திரத்தை விட சில மடங்கு
பெரிய நட்சத்திரமாயிருந்தால் அது அழியும்போது ஒரு 'கருந்துளை'
ஆகிவிடுகிறது. பிரபஞ்சத்தின் அதி பயங்கர, அச்சமூட்டும் ஒன்றுதான்
கருந்துளை.
மாபெரும் அரக்கன் என்ற பெயர் கொண்டது
கருந்துளை. ஏன்? தன் அருகில் எது வந்தாலும், நட்சத்திரங்களோ அல்லது
கோள்களோ, எதுவாயினும் அதை அப்படியே 'ஸ்வாகா' செய்து விடும். பூமியை விட
கோடி மடங்கு பெரிய நட்சத்திரம் ஆனாலும் அப்படியே விழுங்கப்பட்டுவிடும்.
வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் வேகம் (அதாவது பூமியை வினாடிக்கு
ஏழு முறைக்கு மேலாக சுற்றும்) கொண்ட ஒளியைக் கூட தன்னுள் இழுத்துவிடும்,
கருந்துளை. அங்கு ஒளி சுத்தமாக இல்லாததினால்தான் அது கருப்பாக
இருக்கின்றது.
பிரபஞ்சத்தின் பெரிய பெரிய ரகசியங்களையும்
கண்டுபிடித்து, பல மூட நம்பிக்கைகளை அகற்றிய விஞ்ஞானிகளுக்கு
பிரபஞ்சத்தின் விஞ்ஞானத்தில் சவாலாக இருப்பது கருந்துளைக்குள் செல்லும்
நட்சத்திரம் போன்ற பொருட்கள் என்னவாகின்றன என்பதுதான். அதற்குள் சென்ற
பொருட்களின் தடயமே இல்லாமல் போகின்றது. அந்த பொருள் என்னவாயிற்று என்று
தெரியவில்லை. பௌதீக விதிகள் எல்லாம் அங்கு ...............
பிரபஞ்சத்தின் பல, பல உண்மைகளை
வெளிக்கொணர்ந்த விஞ்ஞானிகள், தற்போது நிரூபிக்க முடியாமல் இருப்பது இரண்டு
முக்கிய நிகழ்ச்சிகள், ஒன்று கருந்துளைக்குள் செல்லும் பொருள்
என்னவாகின்றன? மற்றொன்று மாவெடிப்பு நடப்பதற்குமுன் என்ன நடந்தது?
நன்றாகப் பார்த்தால் இவை இரண்டும்
ஒன்றுக்கொன்று எதிரானவை. மாவெடிப்பு (created matter)) பொருட்களை உண்டு
பண்ணுவது. கருந்துளை (destroyed matter) பொருட்களை அழிக்கின்றது. மா
வெடிப்பில், ஒன்றுமில்லா நிலையில் இருந்து பொருட்கள் உற்பத்தியாகின்றன. அதே
சமயம், கருந்துளையில் பொருட்கள் ஒன்றுமில்லாமல் போகின்றன. இதை இரண்டையும்
இணைத்துப் பார்கலாமா? கருந்துளையில் அழியும் பொருட்கள் மாவெடிப்பில்
தோன்றுகின்றன என்று?
பிரபஞ்சத்தில் தோன்றும் கருந்துளைகள் மூலமாக புதிய பிரபஞ்சம் உருவாகிறது என்ற விஞ்ஞானிகளின் புதிய கோட்பாட்டை ஒத்துக் கொள்ளலாமா?
விரிவடையும் பிரபஞ்சம் மீண்டும் சுருங்குமா?
எந்த ஒரு வெடிப்பு நிகழ்ந்தாலும்,
வெடித்துச் சிதறும் பொருட்கள் வேகமாக நாலாப்பக்கமும் பரவலாக சென்று
விழுவதைக் கண்டுள்ளோம். அவ்வாறு விழுவதற்குக் காரணம் பூமியின் ஈர்ப்புவிசை.
ஈர்ப்புவிசை இல்லாத வெளியில் இந்த வெடிப்பு நிகழுமேயானால் என்னவாகும்?
வெடித்துச் சிதறும் பொருட்கள் வெடிப்பின் வேகத்தில் தொடர்ந்து சென்றுகொண்டே
இருக்கும்; கீழே விழாது. வேறு ஏதாவது ஒரு சக்தி தடுத்து நிறுத்தாவிட்டால்
வேகமாய் செல்லும் பொருள் அதன் வேகத்தில் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும்.
வெளியில் நாம் ஒரு கிரிக்கெட் பந்தை
மட்டையால் அடித்தால் அந்த பந்து சென்று கொண்டே இருக்கும்; விழவே விழாது.
சிக்செர் எல்லாம் தாண்டிச் சென்றுவிடும். வேறு யாராவது அடித்த வேறு ஒரு
பந்து, நாம் அடித்த பந்தின் அருகில் வந்தால் இரண்டு பந்தும் ஒன்றை ஒன்று
இழுத்துக்கொண்டு இணைந்துவிடும். ஏனென்றால் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா
பொருட்களுக்கும் அதனதன் நிறைப்படி ஈர்ப்புவிசை இருக்கின்றது.
(சூரியன் உருவாகியவுடன் ஏற்பட்ட அதிபயங்கர
வெடிப்புடன் உண்டான புகையும், தூசும் இப்படிதான் தூக்கி எறியப்பட்டு
சூரியனைச் சுற்ற, அவை ஈர்ப்பு விசையால் இணைந்து தான் இந்த பூமியும் மற்ற
கோள்களும் உருவாகின)
மா வெடிப்பிற்குப் பிறகு விரிவடைந்த
பிரபஞ்சம் அதன் வெடிப்பு வேகம் குறையும்போது பிரபஞ்சத்தில் இருக்கும்
நட்சத்திரங்கள், பால்வெளி மண்டலம் போல உள்ள எண்ணற்ற மண்டலங்களின் ஈர்ப்பு
விசையினால் மீண்டும் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு சுருங்கி, தொடங்கிய
நிலைக்கே வந்துவிடும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர். அதனை மா
சுருக்கம் (big crunch) என்று அழைத்தனர். மாவெடிப்பு ஏற்பட்டு 1300 கோடி
ஆண்டுகள் ஆனதனால் விரிவாக்க வேகம் குறைந்து ஈர்ப்பு விசையினால் இந்த
சுருக்கம் ஆரம்பித்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.
ஆனால் அதிநவீன தொலைநோக்கியில்
பிரபஞ்சத்தின் விரிவு வேகம் குறையவில்லை என்றும், மாறாக பிரபஞ்சம் வேகமாய்
விரிவடைவதை கண்டறிந்தபோது விஞ்ஞானிகள் ஆச்சரியத்தின் எல்லைக்கே
சென்றுவிட்டார்கள் . இந்த வேகத்தில் விலகிச் சென்றுகொண்டிருந்தால் ஈர்ப்பு
விசை வலுவிழந்துவிடும். அதன் விளைவு மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
அதாவது நம்மைச் சுற்றி உள்ள பொருட்கள் எல்லாம் பூமியிலிருந்து மேலே எழுந்து
முதலில் மிதக்க ஆரம்பிக்கும். எல்லாப் பொருட்களும் அணு அணுவாகப் பிரிந்து
வெளியில் விலகிச் சென்றுவிடும். மனிதர்களும், விலங்குகளும் விதிவிலக்கல்ல.
ஏனென்றால் ஈர்ப்புவிசை தான் இவையனைத்தையும் இழுத்து இணைத்து
வைத்திருக்கின்றன. முன்னர் கூறியதுபோன்று சூரிய குடும்பதில் உள்ள எல்லா
கிரகங்களும் சூரியனை விட்டுப் பிரிந்து சென்றுவிடும். விரிவாக்கக வேகம்
தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தால் பிரபஞ்சம் அழியும் என்ற கோட்பாட்டை பல
விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ஆனால் கனடா நாட்டில் இயற்பியல் துறையில்
ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பரம்சிங் என்ற மதிப்பிற்குரிய இந்திய விஞ்ஞானி
இந்த விரிவாக்கம் தொடர்ந்து நடக்காது, பிரபஞ்சம் ஈர்ப்புவிசையால் மீண்டும்
சுருங்கும் என்கிறார். அவர் ஒரு புதிய கணக்கை வெற்றிகரமாக வடித்துள்ளார்.
அந்த கணக்கு கூறுவது என்னவென்றால் ஈர்ப்பு விசையினால் சுருங்கும் பிரபஞ்சம்
மிக மிகச் சிறியதாக சுருங்கிவிட்டால் ஈர்ப்புவிசை எதிர்விளைவுகளை
ஏற்படுத்தி பிரபஞ்சத்தை விரிவாக்கும் என்பதுதான். அதற்கு 'big bounce'
என்று பெயர் கொடுக்கிறார். நாம் வாழும் இந்த பிரபஞ்சம் அப்படிதான்
உருவாயிருக்கின்றது என்று தெளிவுபட கூறுகின்றார்.
விரிவடைதலும் சுருங்குவதும் என்ற
திரும்பத் திரும்ப நடைபெறும் நிகழ்ச்சியால்தான் நாம் இப்போது வாழும் இந்தப்
பிரபஞ்சம் இந்த நிலையில் இருக்கின்றது. 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்
நடந்ததாகக் கூறப்படும் மாவெடிப்பின் மூலமாக பிரபஞ்சம் முதன் முதலாகத்
தோன்றவில்லை. முன்னரே இருந்த பிரபஞ்சம் சுருங்கி விரிவடைந்ததினால் தான் அது
பௌதீக விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றது என்று கூறுகிறார் .ஒன்றுமே
இல்லாத நிலையிலிருந்து பிரபஞ்சம் உருவாகவில்லை என்று அவர் உறுதிபட
கூறுகின்றார். மிகச் சிறிதாக சுருங்கிய பிரபஞ்சத்தை 'ஒன்றுமில்லாத நிலை'
என்று கூறமுடியாது என்கிறார்.
ஆனால் எப்பொழுது பிரபஞ்சம் முதன்முதலில்
தோன்றியது என்ற கேள்விதான் ஆராயப்பட வேண்டியது என்கிறார். அவரது கோட்பாடும்
பலரது பாராட்டைப் பெற்றிருக்கின்றது
முன்னர் ஒரு பிரபஞ்சத்தின் பல
கருந்துளைகள் மூலமாக புதிய பல பிரபஞ்சங்கள் தோன்றியிருக்கின்றது என்று சில
விஞ்ஞானிகள் கூறும் கோட்பாட்டைப் பற்றி பார்த்தோம். மற்றொரு கோட்பாடு
பிரபஞ்சம் தோன்றி விரிவடைதாலும், பின்னர் சுருங்குதல் ஆகிய
நிகழ்ச்சிகளினால் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது என்று கூறுகின்றது..
இவை இரண்டும் இணைந்தே இருப்பதற்கான வாய்ப்பும் இருக்கலாம் அல்லவா?
பிரபஞ்சம் கருந்துளைகள் மூலமாக பல புதிய
பிரபஞ்சங்களை உண்டாக்குவது, ஒரு மரம் முளைத்து அது பல விதைகளை உண்டுபண்ணி
பெருகுதலை ஒத்தும், விரிவடைந்து சுருங்கும் பிரபஞ்சம் ஒரு வாழை மரம்
வளர்ந்து பெரிதாகி, பின்னர் அழிந்து மீண்டும் பூமியின் அடியில் உள்ள
கிழங்கிலிருந்து முளைப்பது போலவும் உள்ளதல்லவா? பூமியில் உயிரினங்கள்
எப்படி பெருகுகின்றனவோ அதேபோல பிரபஞ்சமும் பெருகுகின்றன என்றும் சில
விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பிரபஞ்சத்தின் தோற்றம், வளர்ச்சி, அழிவு
பற்றி ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் பல தடைகற்களைக் கடந்து அனைத்து
உண்மைகளையும், மனித குலத்திற்கு வெற்றிகரமாக வழங்குவார்கள்.
Subscribe to:
Posts (Atom)